This Article is From Jun 01, 2018

இந்திய நகரங்களை ஸ்தம்பிக்கவைக்கும் விவசாயிகளின் பந்த்!

இந்திய அளவில் 7 மாநிலங்களின் விவசாயிகள் இன்று முதல் 10 நாட்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்

10-வது நாள் அகில இந்திய அளவில் பந்த் நடத்த உள்ளனர் விவசாயிகள்

ஹைலைட்ஸ்

  • சாலைகளில் பால்-ஐ கொட்டி எதிர்ப்பு தெரிவித்தனர் விவசாயிகள்
  • 7 மாநில விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்கின்றனர்
  • 10-வது நாள் அகில இந்திய பந்த் நடத்தப்பட உள்ளது
New Delhi:

இந்திய அளவில் 7 மாநிலங்களின் விவசாயிகள் இன்று முதல் 10 நாட்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்தப் போராட்டத்தால், அந்தந்த மாநிலங்களில் இருக்கும் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

முதல் நாள் போராட்டமான இன்று, பல்லாயிரம் லிட்டர்கள் கொண்ட பால்-ஐ சாலையில் ஊற்றி தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர் விவசாயிகள். பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கேரள மற்றும் ஜம்மூ & காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருக்கும் விவசாயிகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர்.

விவசாயக் கடன் தள்ளுபடி, கொள்முதலுக்கு தகுந்த விலை, நிரந்தரமான சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இந்த 10 நாட்கள் போராட்டம் நடக்க உள்ளது. இந்தப் போராட்டத்தின் போது, எந்த சாலை மறியலிலும் விவசாயிகள் ஈடுபடப் போவதில்லை. மாறாக, தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரமாக அமர்ந்து தங்களது எதிர்ப்பைக் காட்டப் போகின்றனர். 

இந்தப் போராட்டத்தை ராஷ்டிரிய கிசான் மகாசங் என்ற அமைப்பு ஒருங்கிணைக்கிறது. இந்த அமைப்புடன் 130 விவசாய அமைப்புகள் இணைந்து நெடும் போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர். 

இந்த மாபெரும் போராட்டம் குறித்து ராஷ்டிரிய கிசான் மகாசங்கின் தலைவர் சிவ் குமார் ஷர்மா, `இது  தற்போது இந்திய அளவிலான பந்த் ஆக மாறியுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு `கோன் பந்த்' என்று பெயரிட்டு உள்ளோம். நாங்கள் நகரத்துக்குச் சென்று முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட மாட்டோம். ஏனென்றால் மக்களின் அன்றாட வாழ்க்கையை நாங்கள் பாதிக்க விரும்பவில்லை. ஜூன் 10 ஆம் தேதி அகில இந்திய பந்த்க்கு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். அன்று 2 மணி வரை பந்த் நடக்கும். நகரங்களில் இருக்கும் வியாபாரிகள் அவர்களின் கடைகளை மதியம் 2 மணி வரை மூடி வைக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். யாருக்காவது காய்கறியோ பால் பொருளோ வாங்க வேண்டுமென்றால் அவர்கள் கிராமங்களுக்கு வரட்டும்' என்று கூறியுள்ளார். 

சில மாதங்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் இருந்து 35,000 விவசாயிகள் மும்பைக்கு அணிவகுத்துச் சென்றனர். தங்களது கோரிக்கைகளை அரசுக்கு முன் காட்ட இந்த ஊர்வலத்தை விவசாயிகள் பேரணியை முன்னெடுத்தனர். இதையடுத்து, மகாராஷ்டிரா அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அடி பணிந்தது. இந்நிலையில், தற்போது 7 மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

சென்ற ஆண்டு, ஜூன் மாதம் 6 ஆம் தேதி, மத்திய பிரதேச மாநிலத்தின் மண்டசுர் பகுதியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது 7 பேர், போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் இறந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்திலும் இந்தப் போராட்டம் நடத்தபடுகிறது.

.