ஹைலைட்ஸ்
- இந்த சாலைத் திட்டத்துக்கு பரவலான எதிர்ப்பு வந்துள்ளது
- பெரும் அளவிலான விவசாய நிலங்கள் பாதிக்கபடும் என குற்றச்சாட்டு
- இந்த சாலை அமைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
சேலத்தில் இருந்து சென்னைக்கு சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் பசுமைச் சாலை திட்டம் என்ற பெயரில் புதியதாக சாலை திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. சென்னைக்கு சுமார் 3 மணி நேரத்தில் செல்லும் வகையில் அமைக்கப்படவுள்ள இந்த பசுமைச் சாலை திட்டத்திற்கு தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில், இப்புதிய சாலை அமைத்திட முதல் கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், இதற்கு பல்வேறு தரப்பினரும் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சாலை போடுவது தொடர்பாக சேலத்தில் இருக்கும் மணியனூரில் கருத்துக் கேட்பு கூட்டம் அரசு சார்பில் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள், அரசு அதிகாரிகளுடன் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக பாதியிலேயே வெளியேறினர்.
மணியனூரில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் வட்டாட்சியர் பத்மபிரியா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டம் துவங்குவதற்கு முன்பே, இந்த சாலை யாருக்காக? எதற்காக? எப்படி அமைக்கப்படுகிறது என்ற விளக்கம் அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து, நிலம் எடுப்பது தொடர்பான தகவல்களை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்து, விவசாயிகள் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்தனர்.