வரும் நவம்பர் 30 ஆம் தேதி, அனைத்து இந்திய கிசான் சங்கர்ஷ் விவசாயிகள் சங்கம், மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
கிசான் சங்கர்ஷ் சங்கம் என்பது இந்தியாவில் இருக்கும் 180 விவசாயிகள் சங்கத்தின் கூட்டமைப்பாகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இதைப் போன்ற ஒரு பெரும் போராட்டத்தை கிசான் சங்கர்ஷ் அமைப்பு டெல்லியில் நடத்தி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு பெரும் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து பெரும் அளவிலான விவாசயிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல டெல்லியை ஒட்டியுள்ள மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரம் விவசாயிகள் அரசுக்கு எதிரான இந்தப் பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தப் போராட்ட அறிவிப்பு குறித்து சுவராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ், ‘கரீஃப் பயிர்களுக்கு சரியான விலை கொடுக்கப்படாததால் விவசாயிகள் மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்' என்று தெரிவித்தார்.
விவசாயிகள் தொடர்ந்து, ‘நாட்டில் வேளாண் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அனைவரும் வாங்கியுள்ள கடன்களை ரத்து செய்ய வேண்டும். மற்றும், விளை பொருட்களுக்கு உரிய விலை கொடுக்கப்பட வேண்டும்' என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)