இப்போதுதான் முதன்முறையாக, 3 முறை முதல்வர் மற்றும் எம்.பி.,-க்கு எதிராக பி.எஸ்.ஏ பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- பி.எஸ்.ஏ மூலம் 2 ஆண்டுகள் ஒருவரை சிறையில் அடைக்க முடியும்
- ஃபரூக் அப்துல்லாவை விடுதலை செய்யக்கோரி வைகோ வழக்கு
- அந்த வழக்கில் மத்திய அரசை விளக்க அளிக்கச் சொல்லி உத்தரவு
New Delhi: ஜம்மூ காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மீது, பொதுப் பாதுகாப்புச் சட்டம் எனப்படும் பி.எஸ்.ஏ-விற்கு கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், எந்தவித சட்ட உரிமையும் இல்லாமல் ஒருவரை 2 ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்கும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது அமைதியைக் குலைத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஃபரூக் அப்துல்லா மீது பி.எஸ்.ஏ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜம்மூ காஷ்மீருக்கு கடந்த மாதம் 5 ஆம் தேதி சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து, வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அப்துல்லா. தற்போது அந்த வீட்டுச் சிறையானது சிறையாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. அவர் மட்டுமல்லாமல் காஷ்மீரில் இருக்கும் நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் வீட்டுச் சிறையில்தான் இருந்து வருகின்றனர். ஃபரூக்கின் மகனான ஒமர் அப்துல்லா, முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்டி ஆகியோரும் வீட்டுச் சிறையில்தான் உள்ளனர்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட அடுத்த நாள், ஃபரூக் அப்துல்லா நாடாளுமன்றத்துக்கு வரவில்லை. இதைச் சுட்டிக்காட்டி சக உறுப்பினர்கள் கேட்டபோது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ஃபரூக் அப்துல்லாவை காவலில் வைக்கவில்லை. அவர் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே வீட்டில் இருக்கிறார்” என்றார். ஆனால், சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னர் அவரின் வீட்டுச் சிறை குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்தது அரசு தரப்பு.
பி.எஸ்.ஏ சட்டமானது தீவிரவாதிகள், பிரிவினைவாதிகளுக்கு எதிராகத்தான் பயன்படுத்தப்படும். இப்போதுதான் முதன்முறையாக, 3 முறை முதல்வர் மற்றும் எம்.பி.,-க்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மூ காஷ்மீரில் இன்னும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன
இன்னும் ஒரு மாதத்தில் ஐ.நா சபையின் பொதுச் சபைக் கூட்டம் நடக்க உள்ளது. அதற்கு முன்னர் ஃபரூக் அப்துல்லா, ஊடகங்களைச் சந்தித்து காஷ்மீரின் நிலைமை குறித்து விளக்கினால், அது மத்திய அரசுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். அதை மனதில் வைத்துத்தான் ஃபரூக் அப்துல்லா மீது பி.எஸ்.ஏ சட்டம் பாய்ந்துள்ளது என்று கூறப்படுகிறது.
ஃபரூக் அப்துல்லாவை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கு குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோதான், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த நபர். அவர் சுமார் 40 ஆண்டுகளாக அப்துல்லாவின் நண்பராக இருந்து வருகிறார்.
நீதிமன்றத்தில் வைகோ, “ஃபரூக் அப்துல்லாவுக்கு எதிரான அரசின் நடவடிக்கை சட்டத்துக்குப் புறம்பானது. ஜனநாயக நாட்டில் வழங்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்திற்கும் எதிரானது. அவரை விடுவிக்க வேண்டும்” என்றார்.
அதற்கு மத்திய அரசு தரப்பு, “வைகோ, ஃபரூக் அப்துல்லாவுக்கு சொந்தக்காரர் அல்ல. சட்டத்தை மீறி அவர் நடக்கச் சொல்கிறார்” என்று எதிர்வாதம் வைத்தது. இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் 30 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த ஃபரூக் அப்துல்லா, “உங்கள் உடல் எல்லாவற்றையும் தாக்குப்பிடித்தது. ஒன்றாக நின்று தாக்குப்பிடித்தது. அனைத்து மோசமான விஷயங்களுக்கு எதிராகவும் போராடியது. ஆனால், திடீரென்று உங்கள் உடலின் ஒரு பகுதி துண்டாகிவிட்டால்..? அவர்களால் நிலங்களைத்தான் பிரிக்க முடியும். மனங்களை அல்ல. இந்துக்களையும் முஸ்லிம்களையும் அவர்களால் பிரிக்க முடியாது. எனது இந்தியா எல்லோருக்குமானது என்று நான் நினைத்தேன்” என்று மத்திய அரசை விமர்சித்தார்.