"இந்த நாட்டில் இனியொரு பாத்திமா இப்படி இறக்கக் கூடாது"
IIT Madras - சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகமான ஐஐடி மெட்ராஸில் (IIT Madras) பயின்று வந்த மாணவி பாத்திமா, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சென்னை மாநகரப் போலீஸ் (Chennai Police), சிசிபி-க்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டுள்ளனர். இன்று மாணவி பாத்திமாவின் தந்தை லத்தீஃப், தமிழக டிஜிபி-ஐ நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு விஷயங்களை ஆதங்கத்துடன் பகிர்ந்து கொண்டார்.
லத்தீஃப் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், "இன்று தமிழக டிஜிபி-ஐ சந்தித்து, என் மகள் தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என டிஜிபி உறுதியளித்துள்ளார். உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று டிஜிபி உறுதியளித்துள்ளார்.
என் மகள் தினமும் என்னிடம் பேசுவாள். தற்கொலை செய்யப்பட்ட அன்று என்னிடம் பேசவில்லை. அன்று என்னிடம் அவள் மனதில் இருந்ததை சொல்ல முன்வரவில்லை. நடந்ததை வைத்துப் பார்க்கும்போது இது தற்கொலையாக தெரியவில்லை. என் மகள் எதைச் செய்தாலும் கடிதம் அல்லது குறிப்பு எழுதிய பின்னர்தான் செய்வாள். ஆனால், இந்த சம்பவத்தில் அப்படி நடக்கவில்லை என்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது.
ஐஐடி-யின் பணிபுரியும் சுதர்சன பத்மநாபன் மோசமானவர் என்று என்னிடம் என் மகள் தெரிவித்திருந்தாள். அவரிடம் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
என் மகள் தற்கொலை செய்து கொண்டதே மிக சந்தேகமாக உள்ளது. அவளுக்கு எப்படி தற்கொலை செய்து கொள்ள கயிறு கிடைத்தது என்பது குறித்து தெளிவு இல்லை. மகள் சம்பந்தப்பட்ட சிசிடிவி வீடியோ காட்சிகளைக் கேட்டிருக்கிறேன். அது இதுவரை கிடைக்கவில்லை.
பாத்திமாவின் செல்போனில், இது தொடர்பாக நிறைய ஆதாரங்கள் இருக்கும். அதை தமிழக போலீஸார் சீல் செய்து வைத்துள்ளதாக கூறியுள்ளனர். எங்கள் முன்னிலையில் அந்த போன் திறக்கப்பட வேண்டும்.
ஐஐடி நிர்வாகம் சார்பில் இதுவரை எங்களிடம் யாரும் பேசவில்லை. இந்த நாட்டில் இனியொரு பாத்திமா இப்படி இறக்கக் கூடாது. இனி ஒரு பெண்ணுக்கு அநீதி நிகழக்கூடாது. என் மகள் தொடர்பான விஷயத்தில் உண்மையைக் கொண்டு வர தமிழக ஊடகங்கள் எங்களுக்குத் துணை நிற்க வேண்டும். தமிழக போலீஸ் மீதும் அரசு மீதும் நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம்,” என்று உணர்ச்சிப் பெருக்கில் பேசினார்.