பிப்.14ம் தேதி இரவு என்பது ”கறுப்பு இரவு”என்று சொல்லத்தக்க வகையில் மாறிவிட்டது - மு.க.ஸ்டாலின்
சிஏஏவுக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தி பிப்.14 இரவை கறுப்பு இரவாக்கிய காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. அதனை அடுத்து பழைய வண்ணாரப்பேட்டையில் கூடி இருந்த போராட்டக்காரர்களை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தியதோடு கண்மூடித்தனமான தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். போலீசாரின் இந்த தாக்குதலில் ஒரு சிலர் படுகாயமடைந்ததாக தெரிகிறது.
இதையடுத்து ஒரு சில மணி நேரங்களில் போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போலீசார் தடியடி நடத்தியதற்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், போலீசாரின் தடியடி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு கடும் தாக்குதல் நடத்தி, பிப்ரவரி 14 இரவை கறுப்பு இரவாக்கிய எடப்பாடி அரசின் காவல்துறைக்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதுடன் அவர்கள் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜனநாயக ரீதியாகப் போராடியவர்களை வேண்டுமென்றே தடியடி செய்து கலைத்து போராட்டத்தை வன்முறைப் பாதைக்குத் திருப்பிட, அதனை வன்முறைப் போராட்டமாகச் சித்தரிக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளது காவல்துறை.
காவல்துறையின் இந்தச் சதிச்செயல் தமிழகம் முழுவதும் காட்டுத் தீயைப் போலப் பரவி, சென்னை முழுவதும் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் பொதுமக்களைச் சாலைக்கு வந்து ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்கள் நடத்தும் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியது. பிப்.14ம் தேதி இரவு என்பது ”கறுப்பு இரவு”என்று சொல்லத்தக்க வகையில் மாறிவிட்டது.
அமைதி வழியில் போராடியவர்கள் மீது, தடியடி நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.