பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில், 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வரும் மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி இல்லாத நிலையில், இடைக்கால நிதி அமைச்சரான பியூஸ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் ரூ.5 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருவாய் உள்ளோருக்கு வருமான வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கபட்டுள்ளது. 5 ஏக்கருக்கு கீழ் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும் போன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 8-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் இன்று அறிவித்துள்ளார். அன்றைய தினமே, 2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். நிதித்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.