தூத்துக்குடி துறைமுகத்தை தென்னிந்தியாவின் முக்கிய துறைமுகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மோடி.
Madurai: எப்போதும் ஏழையின் பக்கமே நிற்பேன் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். மதுரையில் நடைபெற்ற எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் மோடி இவ்வாறு பேசினார்.
மத்திய அரசின் நிதியுதவியுடன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கிறது. இதற்கான அடிக்கல்நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது-
கடந்த நான்கரை ஆண்டுகளில் 35,000 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடி - ராமேஸ்வரம் - பாம்பன் இடையே புதிய இணைப்பு பாலம் கட்டப்படும். மதுரை - சென்னை இடையே அதிவிரைவு தேஜஸ் ரயில் தொடங்கப்படும்.
ஊழலுக்கு எதிராக நான் நடவடிக்கை எடுக்கிறேன். நாட்டின் பாதுகாவலனான என்னை நீக்க முயற்சிக்கின்றனர். நான் எப்போதும் ஏழைகளின் பக்கமே இருப்பேன்.
தமிழகத்தில் சில கட்சிகள் சுயநலத்திற்காக மக்களை தவறாக வழி நடத்துகின்றனர். நலிந்த பொது பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு என்பது பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோரை பாதிக்காது. தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரின் கோரிக்கை பற்றி அதற்கான ஆணையத்தில் பேசியுள்ளேன்.
நாட்டை சுரண்டுபவர்கள் நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்தப்படுவார்கள். அவர்கள் உள்நாட்டில் இருந்தாலும், வெளிநாட்டில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊழலுக்கு எதிரான நடவடிக்கை, டெல்லி முதல் சென்னை வரை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூய்மை இந்தியா திட்டம் நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுள்ளது. நாடு முழுவதும் 9 கோடி கழிவறைகள் கட்டித்தரப்பட்டுள்ளன. அவற்றில் தமிழகத்தில் மட்டும் 47 லட்சம் கழிவறைகள் அடங்கும்.
இவ்வாறு மோடி பேசினார்.