Puducherry: கால்பந்து உலக கோப்பையின் இறுதிப் போட்டி நேற்று நடந்து முடிந்தது. இது குறித்து புதுச்சேரியின் ஆளுநர் கிரண் பேடி சொன்ன ஒரு கருத்து தற்போது கலாய்க்கப்பட்டு வருகிறது.
ரஷ்யாவில் நடந்த உலக கோப்பைத் தொடரில் இந்த முறை சாம்பியனாக மகுடம் சூடியது பிரான்ஸ் அணி. க்ரோஷியா நாட்டு கால்பந்து அணியை, 4 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் மாஸாக கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. பிரான்ஸ் நாட்டு அணிக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், கிரண் பேடி பதிவிட்டுள்ள ஒரு ட்வீட் நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது.
நேற்று பிரான்ஸ் வெற்றி பெற்றவுடன் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கிரண் பேடி, ‘புதுச்சேரி குடிமக்களாகிய நாம் (முன்னாள் பிரஞ்சு காலனி) வெற்றி பெற்றுள்ளோம். வாழ்த்துகள் நண்பர்களே. விளையாட்டு அனைவரையும் ஒன்றிணைக்கிறது’ என்று ட்வீட்டிவிட, நெட்டிசன்கள் இதைப் பிடித்துக் கொண்டு பரபரக்கத் தொடங்கினர்.
அதில் ஒருவர், ‘இந்த ட்வீட் தேச விரோச செயலாக பாவிக்கப்படுமா?’ என்று கேட்டார். இன்னொருவர், ‘வெற்றிக்கு சொந்தம் கொண்டாட பலர் வருவர். தோல்வி எப்போதும் அனாதையாகத்தான் இருக்கும்’ என்று கருத்திட்டார்.
கிரண்பேடி தொடர்ந்து தன் ட்வீட்டை நியாயப்படுத்தும் விதத்தில் அடுத்தடுத்து பதிவுகள் இட்டார். ‘பிரஞ்சு நாட்டிடமிருந்து தான் புதுச்சேரிக்கு அதன் நீர் மேலாண்மைத் திட்டம் கிடைத்தது. அவர்கள் புதுச்சேரிக்குக் கொடுத்த தொட்டிகள், ஏரிகள், குட்டைகள், கால்வாய் மற்றும் நீரோடைகளுக்காக கடமைப்பட்டிருக்கிறோம்’ என்று அடுத்தடுத்த பதிவுகளில் தெரிவித்தார்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி, கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரியின் கவர்னராக செயல்பட்டு வருகிறார். இந்த இரண்டு ஆண்டிலும் அவருக்கும் அம்மாநில முதல்வர் நாராயணசாமிக்கும் தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.