இந்தியா முயன்றது போல, தென் துருவத்தில் எந்த நாடும் லேண்டரை தரையிறக்க முயன்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது
New Delhi: கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி, நிலவின் மேற்பரப்பில் சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அதனுடனான தொடர்பு இழக்கப்பட்டது. அப்போதிலிருந்து இன்று வரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முயன்று வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 21 ஆம் தேதிக்குள் விக்ரமுடன் இஸ்ரோ தொடர்பை ஏற்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. 21 ஆம் தேதிக்குப் பின்னர், லேண்டர் இருக்கும் இடத்தில் நிலவின் இரவு வந்துவிடும். அதையடுத்து, லேண்டர் விக்ரம் தன்னை உயிர்பித்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படும்.
சந்திரயான் 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட அதேநாளில் புவி வட்டப்பாதையிலும் விண்கலம், நிலைநிறுத்தப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் ஒவ்வொரு நிலையாக அதிகரிக்கப்பட்டு நிலவின் சுற்று வட்டப்பாதையில் சரியாக சேர்ந்த சந்திரயான் 2-ன் விக்ரம் லேண்டர் விண்கலம், செப்டம்பர் 7 ஆம் தேதி, அதிகாலை நிலவில் தரையிறங்குவதென திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, நிலவை நோக்கி பயணித்தது லேண்டர்.
எனினும், சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பிரிந்து நிலவில் தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் தொலைவே இருந்தபோது, தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் விக்ரம் லேண்டருக்குமான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது என இஸ்ரோ தலைவர் சிவன் வருத்தத்துடன் அறிவித்தார். என்ன காரணத்தால் இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது குறித்த தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, தகவல் தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரை கண்டறிந்ததாகவும் இஸ்ரோ தெரிவித்தது. தொடர்ந்து, விடுபட்ட தகவல் தொடர்பை மீட்கும் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் எனவும் தெரிவித்திருந்தது இஸ்ரோ.
சந்திராயன் 2 திட்டம் தொடங்கப்பட்டபோதே, லேண்டர் மற்றும் ரோவரின் ஆயுட்காலமானது வெறும் 14 நாட்கள்தான் என்று கூறப்பட்டது. சந்திராயன் 2-வின் ஆர்பிட்டர் ஓராண்டு வரை நிலவைச் சுற்றிவந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டது. நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் இருக்கிறது. அங்கு இரவு நேரங்களில் வெப்பநிலை 200 டிகிரி செல்ஷியஸைத் தாண்ட வாய்ப்புள்ளது. இதனால் லேண்டர், 21 ஆம் தேதிக்குப் பிறகு உயிர்த்தெழுவது சிரமமே.
நிலவில் மட்டும் விக்ரம் லேண்டர் தரையிறங்கியிருந்தால், உலகில் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்குப் பிறகு அதை சாதித்துக் காட்டும் நான்காவது நாடாக இந்தியா உருவெடுத்திருக்கும். இந்தியா முயன்றது போல, தென் துருவத்தில் எந்த நாடும் லேண்டரை தரையிறக்க முயன்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வரலாற்றுச் சாதனையைப் புரிய நினைத்தது இஸ்ரோ.
இருப்பினும் சந்திராயன் 2, தனது இலக்கின் 90 முதல் 95 சதவிகிதத்தை அடைந்துவிட்டதாகவே தெரிவிக்கப்படுகிறது.