இறுதி ஆண்டு தேர்வு நடத்தாமல் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி!
New Delhi: இறுதி ஆண்டு கல்லூரி தேர்வுகள் இந்த ஆண்டு நடைபெற வேண்டும் என்றும் கொரோனா நெருக்கடி காரணமாக மாநிலங்கள் தேவைப்பட்டால் யூஜிசியை அணுகி தேர்வு நடத்த காலக்கெடுவை நீட்டிக்க கோரலாம் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்யா தாக்கரே உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்த வழக்கில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து கல்லூரிகள் மூடப்பட்டதால், மாணவர்கள் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். அதனால், 5 செமஸ்டர்களை முடித்த மாணவர்களை அந்த மதிப்பெண்களை கொண்டு இறுதி ஆண்டு தேர்வை நடத்தாமல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
செப்டம்பர் 30ம் தேதி இறுதியாண்டு கல்லூரி தேர்வுகளை நடத்த வேண்டும் என்று யூஜிசி உத்தரவிட்டுள்ளது. மேலும், இறுதியாண்டு தேர்வு என்பது மிகவும் முக்கியமானது என்றும் தேர்வு நடத்தாமல் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையில் செப்.30ம் தேதிக்குள் இறுதியாண்டு தேர்வுகளை நடத்த பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு ஜூலை 6ம் தேதியே உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், ஆனால் தேர்வுகளை நடத்தாமல் பட்டம் வழங்க மாநில அரசுகள் முடிவெடுக்க முடியாது என்றும் யூஜிசி விளக்கம் அளித்துள்ளது.
எனினும், தேர்வுகளை நடத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க அரசு விரும்பக்கூடும் என்று உச்ச நீதிமன்றத்தில் யூஜிசி ஒப்புக்கொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் தீர்ப்பை வழங்கினர்.
அதில், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை நடத்தலாம், மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி பெற வைக்க முடியாது. எனினும், யூஜிசியை அணுகி தேர்வு நடத்த காலக்கெடுவை நீட்டிக்க மாநிலங்கள் அனுமதி கோரலாம் என்று உத்தரவிட்டனர்.