இதற்கு பதிலளிக்குமாறு மத்திய மற்றும் மகாராஷ்டிரா அரசிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது
ஹைலைட்ஸ்
- இந்த வழக்கு விசாரணை தற்போது ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
- மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராக வேண்டும்.
- தேர்வுகள் நிறுத்தப்படும் என்ற எண்ணத்தில் மாணவர்கள் இருக்கக்கூடாது
New Delhi: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 16.38 லட்சத்தினை கடந்துள்ள நிலையில் பல்கழக தேர்வுகளில் இறுதியாண்டு தேர்வுகளைத் தவிர்த்து மற்றத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இறுதி ஆண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை தற்போது ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், “மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராக வேண்டும். உச்சநீதிமன்ற விசாரணையின் காரணமாக தேர்வுகள் நிறுத்தப்படும் என்ற எண்ணத்தில் மாணவர்கள் இருக்கக்கூடாது.” என பல்கலைக்கழக மானிய குழு(யுஜிசி) தற்போது தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் மனுதாரர்களில் ஒருவரான ஆபிஷேக் மனு சிங்வி, இணைய வழி வாயிலாக பல்கலைக்கழகத் தேர்வுகள் நடைபெறும் என பல்கலைக்கழகங்கள் தெரிவிக்க முடியாது. ஏனெனில், பல பல்கலைக்கழகங்களில் அடிப்படை தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு இல்லை. எனவே ஆன்லைன் தேர்வுகளை ஒரே மாதிரியாக நடத்துவது சாத்தியமில்லை என்று தனது தரப்பு வாதத்தினை வைத்திருந்தார்.
மேலும், விருப்பத் தேர்வு என்பது சிக்கலானது என்றும், இது தொடர்பாக மாநில அரசுகள் முடிவுகளை எடுக்க அனுமதிக்கும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் பிரிவுகளையும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அரசு நடத்தும் கல்லூரிகளுக்கான இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்துள்ள மகாராஷ்டிரா அரசிடம், மாநில பேரிடர் மேலாண்மைக் குழு எடுத்த முடிவை பதிவு செய்யுமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இந்த வழக்கில் மற்றொரு மனுதாரரான சிவசேனா, தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதன் மூலம் யுஜிசி "மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பையும் புறக்கணிக்கிறது" என்று தனது மனுவில் கூறியுள்ளது.
பின்னர் நீதிமன்றம் உள்துறை அமைச்சகத்தை தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்படி கேட்டுக்கொண்டது. இந்த மாத தொடக்கத்தில் இறுதி ஆண்டு தேர்வுகள் நடைபெறலாம் என்று அமைச்சகம் கூறியது. திங்கள்கிழமை (ஆகஸ்ட் 3) க்குள் இது குறித்து விரிவாக பதிலளிப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது, ஆனால் அனைத்து மாணவர்களும் தங்கள் தேர்வுகளுக்கு தொடர்ந்து தயாராக வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக “மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும்.” என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர் சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர் ஷா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கினை ஆகஸ்ட் 10 அன்று ஒத்தி வைத்துள்ளது.