This Article is From Sep 01, 2019

'வங்கிகளை இணைக்கும் நடவடிக்கையால் ஒருவர்கூட வேலையிழக்க மாட்டார்கள்' - அமைச்சர் உறுதி!!

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ள நிலையில், அதனை சரியான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

'வங்கிகளை இணைக்கும் நடவடிக்கையால் ஒருவர்கூட வேலையிழக்க மாட்டார்கள்' - அமைச்சர் உறுதி!!

27 மாநில வங்கிகள் 12 வங்கிகளாக இணைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Chennai:

பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கையால் ஒருவர்கூட வேலையிழக்க மாட்டார்கள் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வெள்ளியன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 27 மாநில வங்கிகள், இணைக்கப்பட்டு 12 வலுவான வங்கிகளாக மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவித்தார். 

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக குறைந்திருக்கிறது. பொருளாதார மந்த நிலை (Economic slow down) காரணமாக மக்களின் நுகர்வு குறைந்து பிஸ்கட் முதல் கார் வரையிலான உற்பத்தி பொருட்கள் தேக்கத்தை சந்தித்து வருகின்றன.

குறிப்பாக ஆட்டோமொபைல் துறை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒவ்வொரு கார் தயாரிப்பு நிறுவனங்களும், முந்தைய மாதங்களை விட சராசரியாக சுமார் 25 சதவீதத்திற்கும் குறையாமல் விற்பனை சரிவை எதிர்கொண்டுள்ளன. இதனை சரி செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டில் உள்ள 27 மாநில வங்கிகள் இணைக்கப்பட்டு 12 வலுவான வங்கிகளாக மாற்றப்படும் என்றார். 

இதனால் வங்கிகளில் வேலை பார்ப்பவர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக பேசப்பட்டு, வங்கி ஊழியர்கள் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்திருந்தன. இந்த நிலையில், சென்னை வந்திருந்த நிதியமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

வங்கிகள் இணைக்கப்படுவதால் ஒருவர் கூட வேலையிழப்பை சந்திக்க மாட்டார்கள் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதனை நான் வெள்ளியன்று அறிவிப்பை வெளியிட்டபோதும் கூறினேன். அதனை வங்கி ஊழியர் சங்கங்கள் நினைவுபடுத்தி பார்க்க வேண்டும். 
இவ்வாறு அமைச்சர் கூறினார். 

.