பட்ஜெட் குறித்து அனைத்துத் தகவல்களையும் ரகசியமாக வைத்திருக்கும் நோக்கில் இந்த ‘பூட்டும்’ நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
New Delhi: வரும் ஜூலை 5 ஆம் தேதி, மோடி தலைமையில் இரண்டாவது முறையாக அமைந்துள்ள பாஜக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி நாடாளுமன்றத்தின் வடக்கு வளாகத்தில் இருக்கும் நிதி அமைச்சகம் வரும் திங்கட் கிழமை முதல் பூட்டப்படும். பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளான ஜூலை 5 வரை இதே நிலையில்தான் நிதி அமைச்சகம் இருக்கும்.
2019- 2020 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இந்த காலக்கட்டத்தில்தான் நிதி அமைச்சகம் உருவாக்கும். இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் முன்னர் கடந்த பிப்பரவரி மாதம் 1 ஆம் தேதி, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது 5 ஆண்டுக்கான அரசு அமைந்துள்ளதால், புதிதாக நிதி அமைச்சராக பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமன், ஜூலை 5 தேதி முழு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்.
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் குழுவில், அனுராக் சிங் தாக்கூர் மற்றும் முதன்மை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் ஆகியோர் உள்ளனர்.
நிதித் துறை செயலர் சுபாஷ் சந்திர கார்க், செலவுகளுக்கான செயலர் கிரிஷ் சந்திர முர்மு, வருவாய் துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே, டி.ஐ.பி.ஏ.எம் துறையின் செயலர் அதானு சக்ரபோர்தி, நிதி சேவைகள் செயலர் ராஜிவ் குமார் ஆகியோர்தான் பட்ஜெட்கான குழுவை வழிநடத்துவது.
பட்ஜெட் குறித்து அனைத்துத் தகவல்களையும் ரகசியமாக வைத்திருக்கும் நோக்கில் இந்த ‘பூட்டும்' நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் நிதி அமைச்சக அலுவலகத்தில் அதிக பாதுகாப்புப் போடப்பட்டிருக்கும். பெரும்பான்மையான பணியாளர்களுக்கு தனிப்பட்ட மின்னஞ்சல் வசதி கொடுக்கப்படாது.
இந்த காலக்கட்டத்தில் நிதி அமைச்சக அலுவலகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் வருவோரை பாதுகாப்புக்கு இருக்கும் நபர்கள் கண்காணிப்பார்கள். அதேபோல முக்கிய அதிகாரிகள் இருக்கும் அறைகளுக்கு வருவோரை டெல்லி போலீஸ் உதவியுடன் உளவுத் துறை கண்காணிக்கும்.
மந்தமாக இருக்கும் பொருளாதாரம், நிதித் துறையில் இருக்கும் சுணக்கங்கள், வேலைவாய்ப்பின்மை, தனியார் முதலீடுகள், ஏற்றுமதியில் இருக்கும் பின்னடைவு, விவசாயப் பிரச்னை, பொதுத் துறை முதலீடுகள் உள்ளிட்டவை குறித்து பட்ஜெட் மூலம் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தீர்வு காண வேண்டியிருக்கும்.
வரும் ஜூலை 17 முதல் 26 வரை, 17வது லோக்சபாவின் முதல் கூட்டம் நடைபெறும்.