This Article is From Jun 14, 2018

மும்பை தீ விபத்து: கட்டிடத்தின் உயரத்துக்கு இயந்திர ஏணிகள் இல்லாதது அம்பலம்

மும்பையில், பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் வசித்து வந்த அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது

மும்பை தீ விபத்து: கட்டிடத்தின் உயரத்துக்கு இயந்திர ஏணிகள் இல்லாதது அம்பலம்

ஹைலைட்ஸ்

  • அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது
  • 33 வது தளத்துக்கு செல்ல போதிய உபகரணங்கள் இல்லை
  • தீயணைப்பு துறையிடம் 90 மீட்டர் உயரமான ஏணி மட்டுமே உள்ளது
Mumbai: மும்பையில், பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் வசித்து வந்த அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 33 வது மாடியில் ஏற்பட்ட தீ என்பதால், அந்த உயரத்துக்குச் சென்று அணைக்க தீயணைப்பு துறையிடம் போதிய உபகரணங்கள் இல்லாதது தெரியவந்துள்ளது.

ஒரு மாநகராட்சி தீயணைப்புத் துறையிடம் உபகரணங்கள் இல்லாத பட்சத்தில், அத்தனை அடுக்குகள் கொண்ட அடுக்குமாடிகளைக் கட்ட அரசு எவ்வாறு அனுமதியளிக்கிறது என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.

இதுகுறித்து பேசிய சிவசேனா எம்.எல்.ஏ சதா சர்வங்கார் “ தீயணைப்பு துறையால் செல்ல முடியாத அளவுக்கு, கட்டிடங்கள் கட்ட, மாநகரட்சி நிர்வாகம் எப்படி அனுமதி அளிக்கலாம்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“போதிய உபகரணங்கள் இல்லாததால் தான் எங்களால் கடைசி தளம் வரை செல்ல முடியவில்லை. எங்களிடம் உள்ள ஏணியைக் கொண்டு 90 மீட்டர் உயரம் மட்டுமே செல்ல முடியும். ஏணிகளுக்கு மாற்றாக ரோபோக்களை தீயணைப்பு பணிகளில் ஈடுபடுத்த திட்டமிட்டு வருகிறோம்” என உண்மையைப் போட்டு உடைத்தார் தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர்.

 ஆனால், கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கியது சரியே என்று கூறும் ஆர்க்கிடெக்ட் மற்றும் டவுன் பிளானர் அமைப்பின் முன்னாள் தலைவர் ஷிரிஷ் ஷுக்காத்மே “கட்டிடங்களுக்கு அனுமதி மறுப்பதுக்கு பதில், கட்டிடங்களில், நீர் தெளிப்பான், தீ எச்சரிக்கை கருவி, அகலமான மாடிப்படிகள்  ஆகியவை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்கிறார். 

"சேனாவும் , பி.ஜே.பியும் இணைந்து 35000 கோடி ரூபாய் பட்ஜெட் கொண்ட மும்பை கார்ப்பரேஷன் எவ்வாறு நிர்வாகம் செய்கின்றனர் என்பதற்கு இந்த சம்பவம்ஓரு எடுத்துக்காட்டு. மும்பை மாநகராட்சியிடம் போதிய உயரத்துக்கு ஒரு இயந்திர ஏணி கூட இல்லை. இங்கு பணத்துக்கு தட்டுப்பாடு இல்லை, ஆனால் பணி செய்வதற்கான மனம் அரசிடம் இல்லை” என மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்செய் நிரூப்பம் தெரிவித்துள்ளார்.
.