This Article is From Aug 21, 2020

தெலுங்கானாவில் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து: 9 பேர் சடலமாக மீட்பு!

தெலுங்கானாவில் எல்லை பகுதிக்கு அருகில் உள்ள ஸ்ரீசைலம் அருகே உள்ள நீர்மின் நிலையத்தில் நேற்றிரவு 10.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து: 9 பேர் சடலமாக மீட்பு!

தெலுங்கானாவில் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து: 9 பேர் சிக்கி தவித்திருந்தனர்!

ஹைலைட்ஸ்

  • மின் நிலையத்திற்குள் சிக்கியிருந்த 9 பேர் சடலமாக மீட்கப்பு
  • நேற்றிரவு 10.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது
  • தீயணைப்பு வீரர்கள் உள்ளே சிக்கியிருந்த 10 பேரை மீட்டுள்ளனர்.
New Delhi:

தெலுங்கானாவில் நீர்மின் நிலைய ஆலைக்குள் உள்ள மின் நிலையங்களில் ஒன்றில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மின் நிலையத்திற்குள் 9 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவித்திருந்தன. 

இந்நிலையில், மின் நிலையத்திற்குள் சிக்கியிருந்த 9 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. 

தெலுங்கானாவில் எல்லை பகுதிக்கு அருகில் உள்ள ஸ்ரீசைலம் அருகே உள்ள நீர்மின் நிலையத்தில் நேற்றிரவு 10.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உள்ளே சிக்கியிருந்த 10 பேரை மீட்டுள்ளனர். 

மேலும், 9 பேர் மின்நிலையத்தின் உள்ளே சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவித்திருந்தன. தொடர்ந்து, அவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடம் படையினர் ஈடுபட்டு வந்திருந்தனர். 

“தீ தொடங்கியவுடன், அவர்கள் யூனிட்களிலிருந்து வெளியேற முயன்றுள்ளனர். ஆனால், முடியவில்லை. தீ பரவாமல் தடுக்க நாங்கள் 400 கே.வி உள்ளீட்டை தனிமைப்படுத்தினோம், அனைத்து யூனிட்களும் இதன் காரணமாக துண்டிக்கப்பட்டன.” என தெலுங்கானா டிரான்ஸ்கோ சிஎம்டி டி. பிரபாகர் ராவ் கூறியிருந்தார்.

“திட்ட அலகு பல மட்டங்களில் இயங்குகிறது. கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள் வெளியே வர முடிந்தது. ஆனால், கீழ் மட்டத்தில் உள்ள மற்றவர்கள் புகை காரணமாக வெளியே வர முடியவில்லை. தற்போதைய சுவிட்ச் ஆப் செய்யப்படுவதும் மீட்பு மற்றும் தப்பிக்கும் முயற்சிகளுக்கு இடையூறாக உள்ளது” என மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார். 

ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜகன்மோகன் ரெட்டி, ஜலா ஹரதி (பூஜை) நடத்தவிருந்த ஸ்ரீசைலம் திட்ட தளத்திற்கான தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். இதற்கிடையில், விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆர்.ராவ் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

விபத்து நடந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கையினை மாநில எரிசக்தி துறை அமைச்சர் ஜகதீஷ் ரெட்டி மற்றும் மற்றொரு அமைச்சரான நிரஞ்சன் ரெட்டி, சிஎம்டி பிரபாகர் ராவ் ஆகியோர் மேற்பார்வை செய்து வருகின்றனர்.

இதுபோன்ற விபத்து இங்கு நடப்பது இதுவே முதல் முறை என்றும், விபத்து குறித்த விசாரணை நடத்தப்படும் என்றும், புகை நீங்கிய பின்னரே சேதாரம் குறித்த விவரங்கள் தெரிய வரும் என்றும், தற்போது சிக்கியுள்ளவர்களை மீட்பதே நோக்கம் என்றும் சிஎம்டி பிரபாகர் ராவ் தெரிவித்துள்ளார்.

முதல்கட்ட தகவல்களின்படி, ஸ்ரீசைலம் அணையின் இடதுபக்க கரையில் பூமிக்கடியில் செயல்பட்டு வந்த நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட குறைந்த மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
 

.