விஜயவாடாவில் ரமேஷ் மருத்துவமனை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த ஹோட்டல் ஸ்வர்ணா பேலஸை ஏலத்தில் எடுத்திருந்தது.
ஹைலைட்ஸ்
- ஹோட்டலில் இன்று அதிகாலை தீ பிடித்ததில் 7 பேர் உயிரிழப்பு
- ஹோட்டலில் 30 கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்
- மின் கசிவுதான் இதற்கு காரணம்
Hyderabad: ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில் கொரோனா வார்டாக மாற்றப்பட்ட ஹோட்டலில் இன்று அதிகாலை தீ பிடித்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜயவாடாவில் ரமேஷ் மருத்துவமனை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த ஹோட்டல் ஸ்வர்ணா பேலஸை
ஏலத்தில் எடுத்திருந்தது.
ஹோட்டலில் 30 கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நோயாளிகள் பீதியடைந்துள்ளனர். இரண்டு பேர் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக கட்டிடத்திலிருந்து குதித்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில் ஒருவருக்கு கணுக்கால் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 30 நிமிட போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ஹோட்டலில் இருந்து இதுவரை 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர், மேலும் சிலர் கட்டிடத்திற்குள் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.
“அதிகாலை 5 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சுமார் 22 நோயாளிகள் இங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாங்கள் கட்டிடத்தில் உள்ள அனைவரையும் வெளியேற்றி வருகிறோம். மின் கசிவுதான் இதற்கு காரணம் என முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.” என கிருஷ்ணா மாவட்ட ஆட்சியர் முகமது இம்தியாஸ் கூறியுள்ளார்.
“இந்த சம்பவத்தில் 15-20 பேர் காயமடைந்துள்ளனர், அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், அவர்களில் 2-3 பேர் ஆபத்தான நிலைமையில் உள்ளனர்.” என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்தார். இது குறித்து விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தீ விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சருக்கு அனைத்து ஆதரவையும் தருவதாக உறுதியளித்துள்ளார்.
“விஜயவாடாவில் உள்ள ஒரு கோவிட் மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென்று நான் பிரார்த்திக்கிறேன். நடைமுறையில் உள்ள சூழ்நிலையை ஆந்திர முதல்வர் மோகன் ரெட்டியுடன் விவாதித்து, சாத்தியமான அனைத்து ஆதரவையும் உறுதிப்படுத்தியுள்ளேன்.” என மோடி டிவிட் செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை வார்டில் வியாழக்கிழமை ஏற்பட்ட எட்டு தீ விபத்தில் 8 கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிரச்சிக்கு உள்ளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.