This Article is From Nov 07, 2018

உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு எதிரொலி… பட்டாசு விற்பனை 40% சரிவு..!

இந்தப் பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசு சீக்கிரமே, ‘க்ரீன்’ பட்டாசுகளைத் தயாரிக்க விதிமுறைகளை வகுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு எதிரொலி… பட்டாசு விற்பனை 40% சரிவு..!

பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு, மக்கள் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, அதன் உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் சில வாரங்களுக்கு முன்னர் தீர்ப்பளித்தது.

தீர்ப்பில் நீதிமன்றம், ‘தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் தான், பட்டாசு வெடிக்க வேண்டும். அதேபோல கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது இரவு 11:55 மணி முதல் 12:30 வரை பட்டாசு வெடிக்கலாம். குறைந்த அளவு சத்தம் வரும் பட்டாசுகள் மட்டுமே வெடிக்கப்பட அனுமதி வழங்கப்படுகிறது. அதுவும் உரிமம் வாங்கியுள்ள விற்பனையாளர்கள் மூலம் மட்டுமே விற்கப்பட வேண்டும்' என்று கூறியது.

இதனால் இந்திய அளவில் 40 சதவிகிதம் பட்டாசு விற்பனை சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்திந்திய வணிகர் சங்க பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால், ‘இந்திய அளவில் பட்டாசு விற்பனை 20,000 கோடி ரூபாய்க்கு நடந்து வந்தது. ஆனால், இந்த முறை விற்பனையில் 40 சதவிகிதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்தபடி ‘க்ரீன்' பட்டாசுகளை உபயோகிப்பது நல்லது தான். ஆனால், பட்டாசுத் துறை, தீர்ப்பால் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. பல லட்சம் பேர் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை தொழிலை நம்பியுள்ளனர். அவர்களுக்கு என்ன பதில்?

இந்தப் பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசு சீக்கிரமே, ‘க்ரீன்' பட்டாசுகளைத் தயாரிக்க விதிமுறைகளை வகுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.