டெல்லியில் நடைபெற்று வரும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களின் மையமாக ஷாஹீன் பாக் உள்ளது.
New Delhi: டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஷாஹீன் பாக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2 நாட்களுக்கு முன்பாகத்தான் ஷாஹீன் பாக்கிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது.
ஜெய் ஸ்ரீ ராம் என கத்திக்கொண்டு அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் நடந்த ஷாஹீன் பாக்கில்தான் நூற்றுக்கணக்கான பெண்கள் தங்களது குழந்தைகளுடன் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய நாட்டில் இந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
துப்பாக்கிச்சூடு நடத்திய அடையாளம் தெரியாத நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் 2 முதல் 3 முறை சுட்டதாகவும், அவர் போலீசாருக்கு அருகே நின்றிருந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
'திடீரென்று துப்பாக்கிச் சத்தம் கேட்டது. ஒருவர் ஜெய் ஸ்ரீ ராம் என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். அவரை பகுதியளவு ஆட்டோமேட்டிக்காக இயங்கும் துப்பாக்கியை வைத்து 2 முறை சுட்டார். அவருக்கு கொஞ்சம் பின்புறத்தில் போலீசார் இருந்தனர்.
துப்பாக்கி சுடாமல் நின்று போனதும் அந்த நபர் ஓடினார். மீண்டும் சுடுவதற்கு முயற்சி செய்தார். பின்னர் துப்பாக்கியை வீசி விட்டு தப்பியோட முயற்சி செய்தார். எங்களில் சிலரும் போலீசாரும சேர்ந்து அவரைப் பிடித்தனர்.' என்று நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
போலீஸ் அதிகாரி சின்மயி பிஸ்வால் கூறுகையில், 'முதலில் வானத்தை நோக்கித்தான் அந்த நப்ர் சுட்டார். அதன்பின்னர், போலீசார் அவரை பிடித்து விட்டனர்' என்று தெரிவித்தார்.
நேற்று முன்தினம் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான 12-ம் வகுப்பு மாணவர் ஒருவர் டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தினார். தான் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு அவர் டெல்லிக்கு பேருந்தில் கிளம்பியுள்ளார்.
ஆட்டோ ரிக்சாவை பிடித்த அவர், ஷாஹீன் பாக்கிற்கு போக வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த ஆட்டோ ஓட்டுனர் போக்குவரத்து நெரிசல் காரணமாக அவரை ஜாமியா மில்லியா பல்கலைக் கழகம் அருசே நிறுத்தியுள்ளார். இதையடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து டெல்லி ஷாஹீன் பாக்கில் போராட்டம் நடந்து வருகிறது. பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் சிறுபான்மை மக்கள் மத அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்தால் அவர்களுக்கு குடியரிமை சட்ட திருத்தம் குடியுரிமையை வழங்குகிறது. இதில் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படாததால் இந்த சட்டம் அவர்களுக்கு எதிரானது என்று கூறி போராட்டங்கள் நடக்கின்றன.
டெல்லியில் நடைபெறும் போராட்டங்களில் ஷாஹீக் பாக் போராட்டம் முக்கிய போராட்டமாக பார்க்கப்படுகிறது. டெல்லி - நொய்டாவை ணைக்கும் முக்கிய சாலையில் கடந்த ஓரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன.