This Article is From Jan 30, 2020

இந்தியாவுக்கு பரவிய கொரோனா: தீவிர மருத்துவ கண்காணிப்பில் கேரள மாணவர்!

Coronavirus: கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள அந்த மாணவர் மருத்துவமனையில் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாவும், தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Coronavirus: 1700க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவில் இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளனர்.

New Delhi:

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் இதுவரை 170 பேர் வரை உயிரிழந்ததை தொடர்ந்து, உலகம் முழுவதும் இந்த வைரஸ் பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் முதலாவதாக ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், வுஹான் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த கேரள மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள அந்த மாணவர் மருத்துவமனையில் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாவும், தொடர்ந்து அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் வைரஸ் அறிகுறி உள்ள 400க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளிலே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து, அவர்கள் அனைவரும் கண்காணப்பிலே இருந்து வருகின்றனர்.

மேலும், வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளவர்கள் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் தனி அறையில் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

ஜனவரி 1ம் தேதி முதல் சீனாவிற்கு சென்று திரும்பியவர்கள் தங்களது உடல்நிலையில் இருமல், காய்ச்சல், சுவாசக்கோளாறு போன்ற ஏதேனும் லேசான மாற்றம் ஏற்பட்டாலும் உடனடியாக அருகில் உள்ள சுகாதார மையத்தை அணுகும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களிலும், கிட்டத்தட்ட 30,000 பயணிகள் வரை தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுப்பப்படுகின்றனர். தொடர்ந்து, கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், சீனாவின் வுஹான் பகுதியில் சிக்கியுள்ள 250 முதல் 300 இந்தியர்களை மீட்க சீனாவுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு கிட்டதட்ட 16 நாடுகளுக்கு வேகமாக பரவியுள்ளது. இந்த நாடுகளில் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. 
 

.