புதுச்சேரியில் இன்று ‘பாண்டிச்சேரி சர்வதேச திரைப்பட விழா’ ஆரம்பமானது. அம்மாநில முதலவர் நாராயணசாமி, திரைப்பட விழாவை தொடங்கி வைத்தார். இதையடுத்து இயக்குநர் செழியனின், ‘டூ-லெட்’ திரைப்படம் திரையிடப்பட்டது.
பி.ஐ.எஃப்.எஃப் அமைப்பின் இயக்குநர் சைபால் சாட்டர்ஜி மற்றும் பிக்யூர்ஃபிலிக்-ன் தலைவர் அபிஷேக் சின்ஹா, தொடக்க விழாவில் பேசினர். இன்று தொடங்கும் இந்த சர்வதேச திரைப்பட விழா வரும் 30 ஆம் தேதியுடன் நிறைவடையும்.
இந்த விழா குறித்து முதல்வர் நாராயணசாமி, ‘இது தான் புதுச்சேரியில் நடக்கும் முதல் சர்வதேச திரைப்பட விழா. இது குறித்து நான் பெருமைப்படுகிறேன். வரும் ஆண்டுகளிலும் இந்த விழா வெற்றியடைய வாழ்த்துகிறேன். இந்த விழாவின் மூலம் பல கலாசாரங்கள், கொள்கைகள் என அனைத்தும் கலக்க வேண்டும் என நினைக்கிறோம். நாங்கள் அனைவரும் சமமானவர்கள் என்பதை நம்புகிறோம். ஆகவே, எங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதுவெல்லாம் நல்லதோ அதையெல்லாம் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்’ என்று துவக்க நிகழ்ச்சியின் போது பேசினார்.
இந்தத் திரைப்பட விழாவில், திரைப்படங்கள், ஆவணப் படங்கள், குறும்படங்கள், விருதுகள் வாங்கிய படங்கள் மற்றும் அனிமேஷன் படங்கள் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.ஐ.எஃப்.எஃப் நோக்கம், சர்வதேச அளவில் எடுக்கப்படும் ‘சுதந்திர சினிமாக்களுக்கு’ ஒரு நல்ல தளத்தை அமைத்துக் கொடுப்பது தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)