This Article is From Aug 23, 2019

‘மோடியை மட்டும் குறைகூறுவது இனி எடுபடாது’- காங்கிரஸில் எழும் கலகக் குரல்கள்!

"அவரை மட்டும் நீங்கள் அனைத்து நேரங்களிலும் குறைகூறிக் கொண்டே இருக்கப் போகிறீர்கள் என்றால், அதுவும் எடுபடப் போவதில்லை."

‘மோடியை மட்டும் குறைகூறுவது இனி எடுபடாது’- காங்கிரஸில் எழும் கலகக் குரல்கள்!

"நாம் விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து நடந்து முடிந்த தேர்தலில் அதிகமாக பேசினோம். ஆனால் மக்களோ, அதற்கு பிரதமர் மோடி காரணமில்லை என்று நினைத்தனர்."

New Delhi:

பிரதமர் நரேந்திர மோடியை தனிப்பட்ட முறையில் குறைகூறுவது இனியும் எடுபடாது என்றும், அவரின் நல்ல திட்டங்களுக்கு மதிப்பளித்து அதற்கு ஏற்றாற் போல் எதிர்க்கட்சிகள் செயல்பட வேண்டும் என்றும் காங்கிரஸின் மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மன்மோகன் சிங், நாட்டின் பிரதமராக இருந்தபோது அவரது அமைச்சரவையில், கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ், “நரேந்திர மோடி, 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை என்ன செய்தார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர் ஏன் மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்பட்டார் என்பதை அறிய வேண்டும்” என்று புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசினார். 

ஜெய்ராம் ரமேஷின் கருத்து காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும், தேசிய அரசியல் தளத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “மக்களிடம் தொடர்பு கொள்ளும் வகையில் பிரதமர் மோடி பேசினார். கடந்த காலங்களில் செய்யாத வேலைகளை அவர் செய்தார் என்பதை நாம் புரிந்துகொள்ளாத வரையில், அவரை நம்மால் எதிர்கொள்ள முடியாது. அவரை மட்டும் நீங்கள் அனைத்து நேரங்களிலும் குறைகூறிக் கொண்டே இருக்கப் போகிறீர்கள் என்றால், அதுவும் எடுபடப் போவதில்லை. அரசு நிர்வாகத்தில் அவர் செய்த காரியங்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்” என்றவர், 
 

தொடர்ந்து, “2019 தேர்தலில்போது, அவரின் திட்டங்களில் சிலவற்றை நாம் கேலி செய்தோம். ஆனால், மிகவும் ஏழைக் குடும்பங்களுக்கு, எரிவாயு சிலிண்டர் அளிக்கும் திட்டமான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா, அவரை கோடான கோடி நாட்டுப் பெண்கள் மத்தியில் பிரபலமடையச் செய்தது. அதுவே அவரை மீண்டும் வெற்றி பெற வைத்தது.

நாம் விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து நடந்து முடிந்த தேர்தலில் அதிகமாக பேசினோம். ஆனால் மக்களோ, அதற்கு பிரதமர் மோடி காரணமில்லை என்று நினைத்தனர். அவர் எப்படி இப்படிப்பட்ட மதிப்புமிக்க மனிதராக மாறினார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்று பேசினார். 

இதை ஆமோதிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி, அபிஷேக் சிங்வி, “பிரதமர் மோடியை தூற்றுவது மட்டும் போதாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஒரே மாதிராயான எதிர்ப்புப் பிரசாரம் அவருக்கு சாதகமாக அமையும். அவரின் செயல்பாடுகள் திட்டங்களின் அடிப்படையில்தான் மதிப்பிடப்பட வேண்டும். உஜ்வாலா திட்டம், அவர் கொண்டு வந்ததில் சில நல்ல திட்டங்களில் ஒன்றுதான்” என்று ஜெய்ராம் ரமேஷுக்கு ஆதரவாக ட்வீட்டியுள்ளார். 


 

.