This Article is From Nov 13, 2018

சத்தீஸ்கர்: முதல்கட்ட தேர்தலில் 70 சதவீத வாக்குப்பதிவு

மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சத்தீஸ்கரில் 18 தொகுதிகளில் நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன

மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள 18 தொகுதிகளில் முதல்கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

Raipur:

சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் முதல்கட்டமாக 18 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இதில் மொத்தம் 70 சதவீத வாக்குக‌ள் பதிவாகியுள்ளன. மீதம் உள்ள 72 தொகுதிகளில் வரும் 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ராமன் சிங் தலைமையிலான அரசு தொடர்ந்து 3 முறை ஆட்சியில் உள்ளது. மீண்டும் 4-வது முறையாக ஆட்சியை பிடிக்க மாநில பாஜக கடுமையாக உழைத்து வருகிறது.

விவசாயிகளை குறிவைத்து காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டது. இருப்பினும் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைக்க தவறியதால் தலித் வாக்குகளை பெறுவதற்கு காங்கிரஸ் தவறி விட்டதாக கூறப்படுகிறது.

சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் குறித்து அறிய வேண்டிய 10 தகவல்கள்

1. முதல்கட்டமாக மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட 18 தொகுதிகளில் தேர்தலை நடத்தி முடித்திருக்கிறது தேர்தல் ஆணையம். இங்கு 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
2. தண்டேவாடா பகுதியில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்கவிருந்த நிலையில் அதற்கு சற்று முன்பாக இந்த சம்பவம் நடந்தது.
3. கொன்டா பகுதியில் 2 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை பாதுகாப்பு படையினர் செயலிழக்கம் செய்தனர். இந்த சம்பவம் நடந்தபோதிலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
4. வாக்குப்பதிவு நடைபெற்ற 18 தொகுதிகளில் 8 தொகுதிகள் காங்கிரஸ் வசம் உள்ளன. மற்றவை பாஜகவிடம் உள்ளன.
5. கடைசியாக நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தீவிர பிரசாரம் மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக ‘அர்பன் நக்சல்'-களுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டது.
6. ஞாயிறன்று 7 வெடிகுண்டுகளை மாவோயிஸ்டுகள் கங்கெர் மாவட்டத்தில் வெடிக்கச் செய்தனர். இந்த சம்பவத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். கடந்த 2 வாரங்களில் மட்டும் 7 முறை மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
7. அரசியல்வாதிகள், பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்டோருக்கு மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுத்துள்ளனர். ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும்போது அதன் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
8. முதல்வர் ராமன்சிங் ராஜ்நந்த்காவோன் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு போட்டியாக பாஜகவில் இருந்து வெளியேறி காங்கிரசில் சேர்ந்த கருணா சுக்லா போட்டியிடுகிறார். இவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உறவினர் ஆவார்.
9. இரண்டாவது கட்டமாக வரும் 20-ம்தேதி மீதம் உள்ள 72 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
10. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மிசோரம், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில வாக்குப்பதிவு முடிவுகளுடன் வரும் டிசம்பர் 11-ம் தேதி வெளியாகிறது.

.