பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் இன்று பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து 9-வது நாளாக உயர்த்தியுள்ளன. இதையடுத்து டீசல் விலையேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் விலை டெல்லியில் 71.15 ரூபாயாகவும், மும்பையில் 75.54 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 74.00 ரூபாயகவும், சென்னையில் 75.19 ரூபாயாகவும் உள்ளது. ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் பெட்ரோல் விலை 2 ரூபாய் அதிகரித்துள்ளது. டீசல் விலை 2.42 ரூபாய் அதிகரித்துள்ளது. டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து உச்சத்தைத் தொட்டுள்ளதால், விலைவாசி உயர்வில் தாக்கம் ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் விலையேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மத்திய அரசுக்கு எதிராகவும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.