பயணத்தின்போது ரயில்வே துறை தேவையான உணவு மற்றும் தண்ணீரைத் தர வேண்டும். பேருந்துகளிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.
ஹைலைட்ஸ்
- 'புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து பணம் வாங்கக் கூடாது'
- புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு கொடுக்க உத்தரவு
- 'சாலைகளில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடப்பதை நிறுத்த வேண்டும்'
New Delhi: புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான போக்குவரத்து குறித்து விளக்கமான இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம். கடந்த மே மாதம் 1 ஆம் தேதி முதல் மத்திய அரசு, கொரோனா ஊரடங்கால் அவதிப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதிலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பட்டினி கிடப்பது பற்றியும், ரயில்வே நிலையங்களில் கிடைக்கும் உணவைத் திருடுவது குறித்தும் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. கடும் வெப்ப காலத்தில் ரயிலில் வந்த தொழிலாளர்கள் சிலர் உணவின்றியும் நீரின்றியும் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. ஒரு ரயில் நிலையத்தில் உயிரிழந்த தன் தாயை, குழந்தை தட்டி எழுப்பும் சம்பவம் குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது உச்ச நீதிமன்றம். அதற்கு மத்திய அரசு தரப்பு, “புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் மிக முக்கியப் பிரச்னைகளாக போக்குவரத்து ஏற்பாடு செய்வதும் உணவு கொடுப்பதும் உள்ளன,” என்று விளக்கம் கொடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் முக்கிய 5 விஷயங்கள்:
1.எப்போது மாநில அரசுகள், ரயில் வேண்டும் என்று கேட்டாலும் அப்போது ரயில்வே துறை அதற்கான சேவையைக் கொடுக்க வேண்டும். போக்குவத்துக்கு என்று புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் எந்த தொகையும் பெறக் கூடாது. அரசுகள் செலவுக்கான தொகையைப் பிரித்து கொடுத்துவிட வேண்டும்.
2.புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எந்த மாநிலத்தில் இருக்கிறார்களோ அந்த மாநில அரசு அவர்களுக்குத் தேவையான உணவைக் கொடுக்க வேண்டும்.
3.பயணத்தின்போது ரயில்வே துறை தேவையான உணவு மற்றும் தண்ணீரைத் தர வேண்டும். பேருந்துகளிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.
4.மாநில அரசுகள் பயணம் தேவைப்படும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி முறையே பதிவு செய்திருக்க வேண்டும். அவர்களுக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போக்குவரத்தை ஏற்பாடு செய்த தர வேண்டும். பயணிக்கும் நபர்கள் பற்றிய முழு விபரங்களையும் சம்பந்தப்பட்ட எல்லோரிடமும் பகிர வேண்டும்.
5.சாலைகளில் நடந்து செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உடனடியாக முறையான இடத்தில் தங்க வைக்கப்பட வேண்டும். அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் செய்து தரப்பட வேண்டும்.