5 மருத்துவ கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹைலைட்ஸ்
- திருப்பூரில் லாரி மீது கார் மோதி கோர விபத்து
- 5 மருத்துவ கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு
- உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைப்பு
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே நடந்த சாலை விபத்தில் 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
சேலத்திலிருந்து ஊட்டி நோக்கி பாராமெடிக்கல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 7 பேர் கொண்ட குழு டவேரா காரில் இன்று அதிகாலை சுற்றுலா சென்றுகொண்டிருந்தனர். காலை 6 மணியளவில் கார், திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பழங்கரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, ஆந்திராவிலிருந்து கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிமெண்ட் லாரியின் பின்புறத்தில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 மாணவர்கள் மற்றும் கார் ஓட்டுநர் என 6 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் காரில் சுற்றுலாவுக்குச் சென்ற மாணவர்கள் சேலம் விநாயகா பாராமெடிக்கல் கல்லூரியில் படித்து வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்த கார் விபத்தில் உயிரிழந்த மாணவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்(21), சூர்யா(21), சின்ன சேலத்தைச் சேர்ந்த வெங்கட்(21), வசந்த்(21) எனத் தெரியவந்துள்ளது. மேலும், படுகாயமடைந்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ்(22) அவிநாசி மருத்துவமனையிலும், சேலத்தைச் சேர்ந்த கார்த்தி(22) கோவை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.