This Article is From Aug 16, 2018

கேரள கனமழை எதிரொலி: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு!

நேற்று அதிகாலை கொச்சி விமான நிலையத்தில் மழை நீர் புகுந்ததால், விமானம் இயக்குதல் நிறுத்திவைக்கப்பட்டது

ஹைலைட்ஸ்

  • வியாழக் கிழமை வரை பல மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
  • மூணார், சபரிமலைக்கு மக்கள் யாரும் வரவேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது
  • ஓணம் கொண்டாட்டங்களை அரசு ரத்து செய்துள்ளது
Kochi/Thirvananthapuram:

கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக, இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், கொச்சியில் இருக்கும் விமானநிலையத்தில் மழை நீர் புகுந்துள்ளது. வரும் சனிக்கிழமை வரை, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், பல மாவட்டங்களுக்கும் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல இயக்கும் ரயில்களும் தாமதமாகவே இயக்கப்பட்டு வருகின்றன.

முக்கியமான 10 விஷயங்கள்:

நேற்று அதிகாலை கொச்சி விமான நிலையத்தில் மழை நீர் புகுந்ததால், விமானம் இயக்குதல் நிறுத்திவைக்கப்பட்டது.

இது குறித்து கொச்சி விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் பேசும்போது, ‘விமான நிலையத்துக்குள் மழை நீர் புகுந்ததால், விமானங்கள் இயக்குதலை நிறுத்தி வைத்துள்ளோம். வரும் சனிக்கிழமை மதியம் 2 மணி வரை, விமானங்கள் இயக்கப்படாது. வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்’ என்று தகவல் தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையும் நேற்று அதிகாலை 2:35 மணிக்கு அதன் முழு கொள்ளளவான 140 அடியை எட்டிய பின்னர், திறந்துவிடப்பட்டது. இதையடுத்து, இடுக்கி மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள் உஷார் நிலையில் இருக்கின்றனர்.

பெரியாறு ஆற்றின் கரையோரங்களில் வசித்து வந்த மக்கள் அணை திறப்பதற்கு முன்னர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

’இந்த பெரும் மழை காரணமாக தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருடன் இந்த தேசம் துணையாக உள்ளது. உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளது’ என்று பிரதமர் மோடி சுதந்திர தின உரையின் போது பேசினார்.

இந்த ஆண்டு அரசு சார்பில் நடத்த இருந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதற்கு ஆகும் செலவை, நிவாரணங்களுக்குக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணார் மலை பிரதேசத்துக்கு சுற்றாலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு வாகனங்களைத் தவிர வேற எந்த வாகனங்களும் அங்கு அனுமதிக்கப்படவில்லை. அதேபோல, சபரிமலைக்கும் யாரும் வர வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இடுக்கி, கண்ணூர், வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வருவதாக தகவல் வந்து கொண்டிருக்கின்றன.

ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் பெய்து வரும் இந்த மழை, கேரள மாநிலத்தில் 1924 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 60,000 மக்களுக்கும் மேல், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 8,000 கோடி ரூபாய் அளவுக்கு சேதாரம் ஆகியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

10,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான சாலைகள், நூற்றுக்கணக்கான வீடுகள் கனமழையால் பாதிப்படைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.