This Article is From Feb 08, 2019

ரஃபேல் ஒப்பந்த விவகாரம்: ராகுல் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகம் தலையிடவில்லை என்றும் அது 7 பேர் கொண்ட குழுவினரால் தான் மேற்கொள்ளப்பட்டது என்று கடந்த வருடம் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் நாட்டுடன் பிரதமர் அலுவலகமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

ஹைலைட்ஸ்

  • ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரான்ஸ் நாட்டுடன் பிரதமர் அலுவலகமும் பேச்சுவார்த்தை
  • பிரதமர் அலுவலக தலையீட்டிற்கு பாதுகாப்பு அமைச்சகம் அதிருப்தி தெரிவித்துள்
  • கடந்த வருடம் பிரதமர் அலுவலகம் தலையிடவில்லை என மறுப்பு தெரிவித்தது.
New Delhi:

ரஃபேல் ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தையும் மீறி பிரான்ஸ் நிறுவனத்துடன் பிரதமர் அலுவலகமே நேரடியாக பேச்சு நடத்தியதாக கூறி செய்திகள் வெளியாகியுள்ளன. 

இதுகுறித்து  'தி ஹிந்து' நாளிதழில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து வெளியான கட்டுரையை வரவேற்று பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் போர் விமானம் வாங்கும் உடன்படிக்கையில் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் பிரான்ஸ் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை மீறிப் பிரதமர் அலுவலகமும் அதேபோல் பேச்சு நடத்தியது தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும் ராகுல் காந்தி கூறும்போது, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக, யாருக்கு மோடி சாதகமாக நடந்துள்ளார் என்று நினைக்கிறீர்கள். எனக்கோ, உங்களுக்கோ அவர் பாடுபடவில்லை. 

அனில் அம்பானிக்காகத்தான் அவர் ஒப்பந்தத்தின் தன்மையையே மாற்றியுள்ளார். பத்திரிகையில் வந்திருக்கும் செய்தியின் மூலம், மோடி ஒரு திருடர் என்பது நிரூபணம் ஆகிவிட்டது' என்று குற்றம் சாட்டினார்.

கடந்த நவம்பர் 24, 2015ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு, பாதுகாப்பு துறைச் செயலாளர் ஜி.மோகன் குமார் கடிதம் எழுதியுள்ளார். அதில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் குழு நடத்தும் பேச்சுவார்த்தைக்கு இணையாக இன்னொரு பேச்சுவார்த்தையை பிரதமர் அலுவலகமும் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு அப்போதைய பாதுகாப்புத் துறை செயலர் எழுதியுள்ளதாக ஒரு கோப்புக் குறிப்பினை செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. 

அப்படியென்றால் அதற்கு அவர் என்ன பதில் அளித்தார் என்பதையும் வெளியிடுவதே பத்திரிக்கை தர்மமாகும். ரஃபேல் ஒப்பந்தம் குறித்தான ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவாகவும், விவரமாகவும் நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் பதில் அளிக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Disclaimer: NDTV has been sued for 10,000 crores by Anil Ambani's Reliance Group for its coverage of the Rafale deal 

.