This Article is From Aug 18, 2018

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

காவிரி கரையோரம் இருக்கும் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளது நீர் வள ஆணையம்

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் கன மழையால், கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு அடுத்த இரண்டு நாட்களில் வினாடிக்கு 2.1 லட்சம் கன அடி நீர் வரத்து இருக்கும் என்றும், அடுத்த இரண்டு நாளுக்கு அதிக அளவிலான நீர் மேட்டூரில் இருந்து வெளியேற்றப்படும் என்றும் மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது. இதனால், காவிரி கரையோரம் இருக்கும் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளது நீர் வள ஆணையம்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்,ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய 11 தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்துக்கும் இந்த வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும், நீர்வள ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பவானி சாகர் மற்றும் மேட்டூர் அணையில் இருந்து இணைந்து வெளியாகும் நீரின் அளவு வினாடிக்கு 2.5 லட்சம் முதல் 2.6லட்சம் கன அடி வரை இருக்கும், என்பதால் பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்றும் அந்த நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது.

அதேபோல் கரூர் மாவட்டம் திருமுக்கூடல், பகுதியில் நீர் பாயும் அளவு, 2.6 முதல் 2.8 லட்சம் கன அடிகளாக இருக்கும் என்பதால், அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப் பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.