New Delhi: கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த கனமழையால், கேரளாவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து தற்போது நீர் வடியத் தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் எலிக்காய்ச்சல் நோய் பரவி வருகிறது.
கேரளாவில், ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு பிறகு, எலிக்காய்ச்சல் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. கேரள மாநிலத்தில் இதுவரை, 372 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.
கோழிக்கோடு மாவட்டத்தில், எலிக்காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் எலிக்காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க, அடுத்த இரண்டு மாதங்களுக்கு 3 மில்லியன் மாத்திரைகள் தேவைப்படுவதாக சுகாதரத் துறை அதிகாரி கோபகுமார் தெரிவித்துள்ளார்.
தற்போது 5,00,000 மாத்திரைகளே ஸ்டாக் உள்ள நிலையில், மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநில அரசுகளிடம் இருந்தும் உதவி கோரப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், கேரள மாநிலத்தில் எலிக்காய்ச்சல் நோய் பாதிப்பு பரவாமல் தடுக்க, மக்களுக்கு தேவையான மருந்துகளை பெறும் பணியில் மாநில சுகாதாரத் துறை ஈடுபட்டுள்ளது.