தொடர் கனமழையால் மீட்புப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
Dehradun: உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காஷி மாவட்டத்தில் இருக்கும் 20 வீடுகளை வெள்ள நீர் அடித்துச் சென்றுள்ளது. இதில் சிக்கிய 18 பேர் மாயமாகியுள்ளனர்.
உத்தரகாண்டில் பெய்த தொடர் கனமழையால் டன்ஸ் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளப் பெருக்கில்தான் 20 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன.
உத்தர்காஷி மாவட்டத்தில் தொடர் மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், உள்ளூர் மாஜிஸ்த்ரேட் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளார்.
வெள்ளத்தில் மாயமானவர்களைக் கண்டுபிடிக்க இந்தோ-திபெத்திய எல்லைப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்களை அனுப்பியுள்ளது உத்தரகாண்ட் அரசு. தொடர் கனமழையால் மீட்புப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல். உத்தரகாஷியின் முக்கிய நெடுஞ்சாலையான கங்கோத்ரி, துண்டிக்கப்பட்டுள்ளது. உத்தர்காஷியில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு கனமழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு உத்தரகாண்டில் வரலாறு காணாத கனமழை பெய்தது. அதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள். உயிரிழப்புக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், நீர் மின் திட்டங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படாதது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
அரசு தகவல்படி, சுமார் 900 பேர் மழை வெள்ளத்தால் இறந்தார்கள் என்று சொல்லப்பட்டாலும், 5,700-க்கும் அதிகமானோர் மழை காரணமாக காணாமல் போயினர். அப்போது பெய்த கனமழையால் 5,000 சாலைகள், 200 பாலங்கள் மற்றும் பல கட்டடங்கள் பாதிக்கப்பட்டன.
(ஏஜென்சிகள் அளித்த தகவல்களுடன் எழுதப்பட்டது)