கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் பல்வேறு அரசியல் கட்சிகள் நிவாரண பணியில் ஈடுபட்டு வருகின்றன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் சார்பாக ரூ. 60 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகள் செய்யப்பட்டுள்ளதாக கமல் தெரிவித்துள்ளார். விரைவில் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இதற்கிடையே புயல் பாதிப்பு பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டனர். இதனை விமர்சித்து ட்விட்டரில் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில், “தரையில் கால் பாவிட, மக்களோடு மக்களாக நின்று பார்த்தால், கேட்டால்... புரியும் சோகம், தெரியும் உண்மை! ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது. கேட்கிறதா அரசுக்கு?” என்று ஒரு பதிவில் கூறியுள்ளார்.
மற்றொரு பதிவில், “ அம்மையப்பன், அம்மாபேட்டை, கோட்டூர் மக்கள்,கோபத்தில் சாலைமறியலில் ஈடுபட்டிருந்தபொழுது உணவுப்பொருட்கள் கொண்டு சென்ற எங்களிடம்,எங்களுக்கு உணவு இருக்கிறது, மின்சாரம்தான் இல்லை என்று பெருந்தன்மையாக வழிவிட்டது தமிழனாக என்னை பெருமைப்படவைத்தது. இவர்களா ஏழைகள்? பெருந்தன்மைச் செல்வந்தர்கள்.” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க - "‘பழைய பல்லவியைப் பாட வேண்டாம்!'- முதல்வருக்கு ஸ்டாலின் பதிலடி"