நிர்மலா சீதாராமன்ரூ .20 லட்சம் கோடி நிதி ஊக்கத்தின் ஐந்தாவது தவணையை அறிவிக்கிறார்.
New Delhi: பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி சிறப்பு திட்டத்தின் இறுதி கட்ட அறிவிப்பினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவிக்கின்றார். முன்னதாக நிலக்கரி, பாதுகாப்பு மற்றும் சிவில் விமானத் துறை, விண்வெளித்துறை போன்றவற்றில் தனியார் நுழைவினை அனுமதிப்பதாக கூறி பல கட்டமைப்பு சீர்திருத்தங்களை அறிவித்திருந்தார். மேலும், விவசாயிகளுக்கு பண்ணை வாயில் உள்கட்டமைப்பிற்காக ரூ .1 லட்சம் கோடி மற்றும் சிறு, குறு நிறுவனங்களை முறைப்படுத்த 10 ஆயிரம் கோடியையும் நிதியமைச்சர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதியமைச்சரின் அறிவிப்பில் குறிப்பிடத்தக்க அம்சங்கள்:
கிராமப்புற மற்றும் நகர்ப்புற கல்வி மற்றும் சுகாதாரத்தினை பொறுத்த அளவில்,
- இந்த நெருக்கடிக்கு இடையில் கிடைத்துள்ள வாய்ப்பினை பார்க்க வேண்டும். தற்போது சுகாதார சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிராம புறங்களில் போதிய அளவில் தொற்றுக்கான ஆய்வுகள் இல்லை.
கல்வியை பொறுத்த அளவில் ஒவ்வொரு வகுப்புகளுக்கும் ஒரு ஒளி அலைவரிசை(சேனல்) என மொத்தம் 12 அலைவரிசைகள் தொடங்கப்பட உள்ளன. இது நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கு பெரிதும் உதவும். கல்வியைத் தொடரவும் கற்றலை மேம்படுத்தவும் தொழில்நுட்பம் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்குக் கல்வி தொடர்பாக உதவ சுயம் பிரபா டி.டி.எச் சேனல் தொடங்கப்பட்டு இருக்கிறது. இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கு இது உதவும் என்றார் நிர்மலா சீதாராமன்.
அனைத்து மாவட்டங்களில் தொற்றுநோய் தடுப்பு மையம். பொது சுகாதார ஆய்வு மையங்களை அனைத்து வட்ட அளவிலும் அமைக்கப்படும்.
திவால் நிலை மற்றும் திவால் குறியீடு தொடர்பாக
கொரோனா நெருக்கடியால் ஏற்பட்ட கடன்கள் வாராக்கடன்களாக வரையறுக்கப்படாது.
திவாலுக்கான வரம்புகள் 1 லட்சத்திலிருந்து 1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கான சட்டம் வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்படும்.
நிறுவனங்கள் திவாலாகும் நிலை ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கும் காலம் 6 மாதத்திலிருந்து ஓராண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களுக்கான சட்டங்களை பொறுத்த அளவில்
- சிறு நிறுவனங்கள், ஒரு நபர் நடத்தும் நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் தொடர்பான அபராதங்கள் குறைக்கப்படுகிறது.
- நிறுவனங்களின் 7 விதிமீறல்கள் தொடர்பான நடவடிக்கைகள் கைவிடப்படுகின்றன.
- சொத்துகள் பதிவு எளிமையாக்கப்படும். வர்த்தக சர்ச்சைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுத்துறையை பொறுத்த அளவில்,
- அனைத்து துறைகளிலும் தனியாரின் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும்.
- தனியார் அனைத்து துறைகளிலும் செயல்பட அனுமதிக்கப்பட்டாலும் பொதுத்துறை தொடர்ந்து இயங்கும்.
- பொது முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் எவை என்பது குறித்தும், தனியார் முதலீட்டுக்கு அனுமதிக்கப்படாத பொதுத்துறை நிறுவனங்கள் எவை என்பது குறித்தும் அரசாணை வெளியிடப்படும்
மாநிலங்களுக்கான நிதியை பொறுத்த அளவில்,
- மாநிலங்கள் தொடர்ந்து நிதி சரிவை எதிர்கொண்டுள்ளன. தொற்று நோயை மாநிலங்கள் எதிர்கொள்வதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்.
- வருவாய் பற்றாக்குறை மானியமாக மாநிலங்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் ரூ.12,390 கோடி வழங்கப்பட்டுள்ளது.
- மாநிலங்களுக்கு பட்ஜெட்டின் அடிப்படையில் ரூ .46,038 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- பேரிடர் மீட்பு நிதியாக முதல் வாரத்தில் ரூ .11,092 கோடி வழங்கப்பட்டுள்ளது.
- கொரோனா தொற்றினை எதிர்கொள்ள ரூ .4,113 கோடி வழங்கப்பட்டுள்ளது.
- மாநிலங்களுக்கான கடன் வரம்பினை 3% லிருந்து 5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ .4.28 லட்சம் கோடி வரை நிதி கிடைக்கும்.