This Article is From Jun 10, 2019

ஒற்றைத் தலைமையால் தான் சிறப்பாக செயல்பட முடியும்: திருநாவுக்கரசர்

எந்த கட்சியாக இருந்தாலும், ஒற்றைத் தலைமையால் தான் சிறப்பாக செயல்பட முடியும் என காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

ஒற்றைத் தலைமையால் தான் சிறப்பாக செயல்பட முடியும்: திருநாவுக்கரசர்

எந்த கட்சியாக இருந்தாலும், ஒற்றைத் தலைமையால் தான் சிறப்பாக செயல்பட முடியும் என காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்த ஒரு கட்சியாக இருந்தாலும், அது, தேசிய கட்சியோ, மாநில கட்சியோ, அந்த கட்சிக்கு ஒருவர் தலைமையேற்றால் தான் அந்த கட்சி முறையாக செயல்படுத்தப்படும்.

இரண்டு போரோ, மூன்று பேரோ, கமிட்டியினர் எல்லாம் கலந்துரையாடலாம், கருத்து கேட்கலாம், முடிவு ஒருத்தர் தான் எடுக்க வேண்டும். கூட்டணிக்கு ஒரு அமைச்சர் பதவி தர தயாராக இருக்கிறார் மோடி. ஆனால், இவர்கள் 2 அமைச்சர் பதவி கேட்பதால் தமிழ்நாட்டிற்கு ஒரு அமைச்சர் கூட கிடைக்கவில்லை.

அதேபோல், அவர்கள் பக்கம் 3 எம்.பி வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், அதனை 30 பேர் கேட்டுக்கொண்டு இருக்கின்றனர். இரட்டை தலைமையை வைத்து என்ன செய்வது? சீட்டா குழுக்கி போட முடியும்?

அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என்றாலும், அங்கு ஒற்றை தலைமை இல்லாததால் தான், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மத்திய அமைச்சர் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது என்று அவர் கூறினார்.

முன்னதாக, 7 கட்டமாக நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தலில், 352 இடங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. ஆனால், தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி போட்டியிட்ட 39 தொகுதிகளில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகன் ரவிந்தரநாத் போட்டியிட்ட தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, ரவிந்தரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என பரவலாக பேசப்பட்டது.

இதனிடையே, எடப்பாடி பழனிசாமி தரப்பினரோ, மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வைத்திலிங்கத்தின் பெயரை மத்திய அமைச்சர் பதவிக்கு பரிந்துரை செய்துள்ளனர். தொடர்ந்து, டெல்லியில் முகாமிட்ட இரு தரப்பினரும் தங்களுக்கு அழைப்பு வரும் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால், மோடியின் புதிய அமைச்சரவையில் இருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து, அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமையே தேவை என அக்கட்சி எம்எல்ஏக்கள் சிலர் கருத்து தெரிவித்த நிலையில், இவ்விவகாரம் பரபரப்பான விவதாமாக எழுந்துள்ளது.

.