This Article is From Dec 03, 2019

சுகாதாரத்துறை வரலாற்றில் முதன் முறை! நர்ஸ் பணிக்கு தமிழகத்தில் திருநங்கை நியமனம்!!

சுகாதாரத்துறை வரலாற்றில் செவிலியர் பணிக்கு திருநங்கை ஒருவர் தேர்வு செய்யப்படுவது என்பது இதுவே முதன்முறை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மாநிலத்திற்கு பெருமையளிக்கும் தருணம் இது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

சுகாதாரத்துறை வரலாற்றில் முதன் முறை! நர்ஸ் பணிக்கு தமிழகத்தில் திருநங்கை நியமனம்!!

செவிலியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள திருநங்கை அன்பு ரூபி.

சுகாதாரத்துறை வரலாற்றில் முதன்முறையாக செவிலியர் பணிக்கு திருநங்கை ஒருவர் தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தமிழ்நாட்டிற்கு பெருமை தரும்  விஷயம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழகத்தில் செவிலியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பணி நியமனம் பெற்றவர்களில் திருநங்கையான அன்பு ரூபி என்பவரும் ஒருவர் ஆவார். சுகாதாரத்துறை வரலாற்றில் திருநங்கை ஒருவர் நர்ஸாக தேர்வாகியிருப்பது இதுவே முதன்முறை என்றும், இது தமிழ்நாட்டிற்கு பெருமை தரும் விஷயம் என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியிருக்கிறார்.

நர்ஸாக தேர்வானது குறித்து திருநங்கை அன்பு ரூபி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்தியாவிலேயே நர்ஸாகும் முதன் திருநங்கை நானாக இருக்கிறேன். எனக்கு வாய்ப்பளித்த தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவள். வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்திருக்கிறேன். சிறு வயதில் எனது தந்தை 2 கண்களையும் இழந்துவிட்டார். பின்னாளில் எனது தாயார் வாழை இலைகளை விற்று அதன் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு என்னை படிக்க வைத்தார்கள்.

எனது நண்பர்கள், பேராசிரியர்களும் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்கள். திருநங்கைகளை இந்த சமூக இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. எங்களை இந்த சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் எங்களுக்கு மருந்தாக அமையும்.

இவ்வாறு திருநங்கை அன்பு ரூபி தெரிவித்தார்.

.