பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், அவர்கள் பாதுகாப்பிற்கென்று பிரத்யேகமாக அவசர உதவி எண் ‘181'-ஐ தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இதற்கான உதவி மையம் அம்பத்தூரில் இன்று முதல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு, ‘மருத்துவ உதவி, சட்ட உதவி, காவல் துறை உதவி, உளவியல் மற்றும் சமூக ஆதரவு, மீட்பு மற்றும் தங்கும் வசதி' ஆகியவையை கேட்டுப் பெற முடியும்.
இன்று தலைமைச் செயலகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடந்தது. அப்போது முதல்வர், ‘பிளாஸ்டிக் விழிப்புணர்வு வாகனத்தையும்' கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் முதல்வர். அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்களும் உடனிருந்தனர்.
தமிழகத்தில் வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல், அத்தியாவசியப் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்த்து மற்ற பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட உள்ளது. இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இன்று தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட்டுள்ள வாகனம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணப்பட உள்ளது.