இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் மோதலால் எல்லையில் பதற்றம் காணப்படுகிறது.
ஹைலைட்ஸ்
- மத்திய அமைச்சர் ஜெய் சங்கர் சீன அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்
- சீனாவின் தாக்குதலுக்கு அந்நாட்டு அமைச்சரிடம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது
- சீன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு வலியுறுத்தல்
New Delhi: லடாக் எல்லையில் நடந்த மோதல் தொடர்பாக இந்தியா - சீனா வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்திய வீரர்கள் உயிரிழப்புக்கு காரணமான சீன ராணுவ அதிகாரிகள் மீது அந்நாடு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பேச்சுவார்த்தையின்போது மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் வலியுறுத்தினார்.
நேற்று முன்தினம் இரவு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை. கற்கள், கட்டைகள் மற்றும் பலத்த ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டதில் இரு தரப்புக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது.
இந்திய தரப்பில் தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் பலியானோர் மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 45 பேர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் நடந்த பின்னர், இரு படைகளும் திரும்பிச் சென்று விட்டன. நடந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே கொரோனா ஒழிப்பு தொடர்பான முதல்வர்கள் மாநாடு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது. மாநாட்டின்போது லடாக் எல்லையில் உயிரிழந்த வீரர்களுக்காக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்பின்னர் பேசிய பிரதமர் மோடி, இந்தியா அமைதியை விரும்புவதாகவும், ஆனால் எவரேனும் சீண்டிப்பார்த்தால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறினார்.
வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகம் வீண் போகாது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த சூழலில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர், சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி-யை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு எல்லையில் நடந்திருக்கும் பிரச்னை குறித்து பேசினார்.