This Article is From Mar 13, 2020

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73-ஆக உயர்வு!! 10 புதிய தகவல்கள்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாகத் தூதரக, உயர் அதிகாரிகள், ஐ.நா. அதிகாரிகள் உள்ளிட்டோரைத் தவிர்த்து மற்றவர்களுக்கு விசா வழங்குவதை ஏப்ரல் 15-ம்தேதி வரையில் நிறுத்தி வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

ஹைலைட்ஸ்

  • மத்திய சுகாதாரத்துறை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது
  • இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் கேரளா.
  • கொரோனா வைரஸை தொற்று நோய் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது
New Delhi:

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73-ஆக உயர்ந்துள்ளது. மிக முக்கிய பிரச்சினையாக இதனைக் கருதி வருகிறோம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார். 

இந்த நேரத்தில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வது என்பது உகந்தது அல்ல என்றும் அவர் எச்சரித்திருக்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாகத் தூதரக, உயர் அதிகாரிகள், ஐ.நா. அதிகாரிகள் உள்ளிட்டோரைத் தவிர்த்து மற்றவர்களுக்கு விசா வழங்குவதை ஏப்ரல் 15-ம்தேதி வரையில் நிறுத்தி வைத்துள்ளது. 

கொரோனா பாதிப்பால் உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4500-யை தாண்டியுள்ளது. 100-க்கும் அதிகமான நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் குறித்த 10 முக்கிய, புதிய தகவல்களைப் பார்க்கலாம்...

1. மகாராஷ்டிராவை சேர்ந்த 1100 புனித பயணிகள், ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் 300 பேர் உள்பட மொத்தம் 6 ஆயிரம் இந்தியர்கள், கொரோனா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஈரானில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை இந்தியா கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. 

2. முதல்கட்டமாக ஈரானிலிருந்து 58 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் அதிக எண்ணிக்கையில் இந்தியர்களை மீட்டுக்கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

3. நாட்டிலேயே கேரளாவில்தான் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 17 பேருக்கு வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக அரியானாவில் 14 இத்தாலிய பயணிகள் உள்ளனர். மகாராஷ்டிராவில் 11 பேருக்கும், டெல்லியில் 6 பேருக்கும், கர்நாடகாவில் 4 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

4. மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு செய்து, கொரோனாவை எதிர்கொள்ள அரசுக்கு உதவ வேண்டும் என்று மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக கடந்த வாரம் மோடி ட்வீட் செய்திருந்தார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர் ஹோலி கொண்டாட்டத்தைத் தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

5. இந்தியாவுக்குச் சீனா, இத்தாலி, ஈரான், கொரியா, பிரான்ஸ், ஸ்பெய்ன், ஜெர்மனி நாடுகளிலிருந்து வருகிற இந்தியக் குடிமக்கள் உள்பட அனைவருக்கும் மத்திய அரசு விசாவை நிறுத்தியுள்ளது. இந்த நாடுகளிலிருந்து பிப்ரவரி 15-ம்தேதிக்கு பின்னர் இந்தியா வந்தவர்கள் 14 நாட்கள் கட்டாய மருத்துவ முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். 

6. கொரோனா அச்சுறுத்தலால் பங்கச் சந்தை சர்வதேச அளவில் கடுமையாக வீழ்ந்துள்ளது. கொரோனா ஒரு தொற்று நோய் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து பங்குச்சந்தை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

7. நாட்டின் பல்வேறு இடங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. டெல்லியில் ஆரம்ப பள்ளி மார்ச் 31-ம்தேதி வரை மூடப்படுகிறது. காஷ்மீர், லடாக்கில் பள்ளிகள், கல்லூரிகள், ஐ.ஐ.எம். ஆகியவை மூடப்பட்டுள்ளன. பட்டமளிப்பு விழாக்களும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

8. உயிர்க்கொல்லி நோயைக் கட்டுப்படுத்துவது முக்கியமான பிரச்சினை என்பதால் இதனை எதிர்கொள்ள அனைத்து மாநிலங்களும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காகப் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் பிரிவு 10-யை மத்திய அரசு செயல்படுத்துகிறது. தொற்றுநோய் சட்டத்தின் 2-வது பிரிவை கடைப்பிடிக்குமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

9. ஐ.பி.எல். 2020 மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர்கிங்ஸ் இடையிலான மேட்ச்சின் டிக்கெட் விற்பனையை மும்பை அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்தப் போட்டி மார்ச் 29-ம்தேதி நடைபெறுவதாக இருந்தது. மே 24-வரையில் நாட்டின் பல்வேறு நகரங்களில் ஐ.பி.எல். நடத்தப்படவுள்ளது. 

10. கொரோனா வைரஸால் லட்சத்திற்கும் அதிகமானோர் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,500-யை கடந்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்குச் சரியான தடுப்பு மருந்துகள் இல்லாததே உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம். மக்கள் அடிக்கடி கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும் என்றும், அதிக எண்ணிக்கையில் கூடக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

.