This Article is From Feb 14, 2019

போக்கு காட்டும் சின்னத்தம்பியை மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறை திட்டம்

திருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புதூர் கிராமத்தில் யானை சின்னத்தம்பி கரும்புகளை சுவைத்துக் கொண்டிருக்கிறான்.

போக்கு காட்டும் சின்னத்தம்பியை மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறை திட்டம்

சுமார் 70 வனத்துறையினர் சின்னத்தம்பியை பிடிக்கும் பணியில் இறங்கியுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • திருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புதூர் கிராமத்தில் உள்ளான் சின்னத்தம்பி
  • சின்னத்தம்பியை பத்திரமாக பிடிக்க வனத்துறை தீவிரம்
  • மாலைக்குள் ஏற்பாடுகளை முடித்து விட திட்டம்

போக்கு காட்டி வரும் யானை சின்னத்தம்பியை மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை, சோமையனூரில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி யானை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு டாப்சிலிப் பகுதியில் விடப்பட்டது. ஆனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சின்னத்தம்பி யானை கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மனிதர்கள் வாழும் பகுதியில் உலவி வருகிறது. சின்னத்தம்பி யானையை வனத்துறையினரும், தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

தற்போது திருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புதூர் கிராமத்தில் யானை சின்னத்தம்பி கரும்புகளை சுவைத்துக் கொண்டிருக்கிறது. முன்பு கிருஷ்ணாபுரத்தில் சின்னத்தம்பி ஒரு ரவுண்டு வந்தது.

வனத்தில் இருந்து ஊருக்குள் வந்திருக்கும் சின்னத்தம்பி கடந்த 15 நாட்களாக போக்கு காட்டி வருகிறது. முதலில் சாதாரண யானையாகத்தான் வனத்துறையினரும், மக்களும் கருதினர். இப்போது தமிழ்நாட்டின் டாப் நியூஸாக சின்னத்தம்பி மாறிப்போயுள்ளான். அவனைப் பற்றிய அப்டேட்டுகள் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இன்று மாலைக்குள் சின்னத்தம்பியை பத்திரமாக பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. கண்ணாடிப்புதூர் கரும்புத்தோட்டம் பள்ளத்தில் அமைந்துள்ளது. அதனை சற்று சமமாக்கிட ஜேசிபி எந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சுமார் 70 வனத்துறையினர் இந்த பணியில் இறங்கியுள்ளனர். டாக்டர்கள் குழுவும் தயார் நிலையில் உள்ளது. பசியாறிவிட்டு மாலை நேரத்தில் சின்னத்தம்பி வெளியே வர வாய்ப்பு இருப்பதால், அதற்குள்ளாக அவனை பிடிக்கும் ஏற்பாடுகளை முடித்துவிட வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அடம்பிடித்தால் மயக்க ஊசியைப்போட்டு பிடிக்கும் திட்டமும் உள்ளது. இன்றை மாலையில் சின்னத்தம்பி சிக்குவானா அல்லது சேட்டையை தொடர்வானா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

மேலும் படிக்க - "என்னவாகும் சின்னத்தம்பியின் நிலைமை..?"

.