2003 முதல் 2008 வரை, வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசில், மாநில கல்வித் துறை அமைச்சராகவும் செயல்பட்டார் பெனிவால்
Jaipur: பாஜக-வைச் சேர்ந்த முன்னாள் ராஜஸ்தான் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஹனுமான் பெனிவால், ராஷ்டிரிய லோக்தந்திரிக் என்னும் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். இது குறித்து பெனிவால், ‘மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு மாற்றாக கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்போம்' என்று கூறியுள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு பாஜக சார்பில், கின்ஸ்வார் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார் பெனிவால். அதைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், சுயேட்சையாக கின்ஸ்வாரில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். அதேபோல 2003 முதல் 2008 வரை, வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசில், மாநில கல்வித் துறை அமைச்சராகவும் செயல்பட்டார் பெனிவால். ஆனால் ராஜேவுக்கு எதிராக பெனிவால் 2013-ல் போர்க்கொடித் தூக்கினார். இதைத் தொடர்ந்து அவருக்கு பாஜக தலைமை நோட்டீஸ் அனுப்பியது. இதைத் தொடர்ந்து அவர் சென்ற ஆண்டு பாஜக-விலிருந்து வெளியேறினார். இந்நிலையில் அவர் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.
பெனிவாலின் ஆர்.எல்.பி கட்சிக்கு, பாரத் வாஹினி கட்சியின் தலைவர் கான்ஷியம் திவாரி ஆதரவு தெரிவித்துள்ளார். திவாரியும், முன்னாள் பாஜக உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய கட்சி ஆரம்பித்ததை அடுத்து பேசிய பெனிவால், ‘பாஜக மற்றும் காங்கிரஸ் அரசுகள் மீது அதிருப்தி கொண்டுள்ள அனைவருடனும் நாங்கள் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்போம். இரு கட்சிகளும் தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டு வந்துள்ளன. விவசாயிகளின் நலன், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, உயர் வகுப்பினரைச் சேர்ந்தவர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு உள்ளிட்டவை எங்கள் கட்சியின் முக்கிய நோக்கமாகும்.
எங்கள் கட்சியின் சின்னமாக ‘பாட்டில்' இருக்கும். பாட்டில் எப்படி வெளிப்படைத் தன்மையுடன் இருக்கிறதோ, அதைப் போலவே எங்கள் செயல்பாடுகளும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும். வரும் சட்டமன்ற தேர்தலில் நாங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவோம்' என்று கூறியுள்ளார்.