சென்னை: குட்கா விவகாரம் தொடர்பாக சென்னை முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். தனக்கும் இந்த முறைகேட்டிற்கும் தொடர்பில்லை என்ற அவர் இதில் பல அதிகாரிகளுக்கு தொடர்பிருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
தமிழகத்தில் புகையிலை, குட்கா போன்ற பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு குட்கா போன்றவை விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதற்கிடையே குட்கா ஆலை உரிமையாளர் மாதவ ராவ் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கடந்த 2016-ல் சிக்கினார். அவர் ரூ. 250 கோடி அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் சென்னை முன்னாள் போலீஸ் கமிஷ்னர் பெயரும் இடம் பெற்றதால் அது ஜார்ஜாக இருக்க கூடும் என புகார்கள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக ஜார்ஜ், காவல் துறை தலைமை இயக்குநர் ராஜேந்திரன், சுகாதார துறை அமைச்சர் சி. விஜய பாஸ்கர் உள்ளிட்டோரின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த பரபரப்பான சூழலில் சென்னை முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எந்தவொரு குட்கா தயாரிப்பாளரிடம் இருந்தும் நான் எந்தவொரு பணமும் வாங்கவில்லை. சிலர் என் பெயரை சொல்லி மாதவ ராவிடம் பணம் பெற்றிருக்க வாய்ப்புள்ளது. சிலர் அளித்த தகவலின் அடிப்படையில் மாதவ ராவின் டைரியில் பதிவுகள் இடம்பெற்றிருக்கலாம். முன்னாள் கமிஷனருக்கு அவர் ஏன் பணம் தர வேண்டும்?. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
எனது பெயர் எப்.ஐ.ஆரில் இல்லை. சென்னை போலீஸ் கமிஷ்னருக்கும் கீழ்மட்ட போலீசாருக்கும் இடையே பல நிலைகள் உள்ளன. சென்னையில் மட்டும் 300 காவல் நிலையங்கள் உள்ளன. கமிஷ்னர் ஒருவர் அனுமதி அளித்தால்தான் முறைகேடு நடைபெறுமா?. இவ்வாறு அவர் கூறினார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)