“அம்மாவின் நினைவிடத்திலேயே திருமணம் நடந்துள்ளதால் அவரது ஆசீர்வாதம் கிடைத்துள்ளது போல உள்ளது”
Chennai: அதிமுக பிரமுகர் எஸ்.பவானிசங்கர், தனது மகனின் திருமணத்தை, சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் ஜெயலலிதா நினைவிடத்தில் நடத்தியுள்ளார். இந்த சம்பவம் அதிமுக தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்தையொட்டி, ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பவானிசங்கரின் மகனான சம்பவசிவராமன் என்கிற சதீஷுக்கும் தீபிகா என்கிற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது.
மணமக்கள், ஜெயலலிதா நினைவிடத்திற்கு முன்னர் அமர, அதற்கு அர்ச்சகர் ஸ்லோகங்கள் சொல்ல, முழு இந்து முறைப்படி திருமணம் நடந்துள்ளது.
திருமணத்தின் போது ஜெயலலிதாவின் சமாதிக்கும் ஆர்த்தி காட்டப்பட்டது. இது குறித்து அதிமுக தொண்டர்கள், “அம்மாவின் நினைவிடத்திலேயே திருமணம் நடந்துள்ளதால் அவரது ஆசீர்வாதம் கிடைத்துள்ளது போல உள்ளது” என்று பூரிக்கின்றனர்.
இந்த திருமண நிகழ்ச்சில் அதிமுக-வின் மூத்த நிர்வாகிகள் தமிழ் மகன் உசேன், கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி, ஜெயலலிதா, சிகிச்சைப் பலனின்றி, சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார். இதைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு அருகே அவரும் அடக்கம் செய்யப்பட்டார்.