கடந்த டிசம்பர் மாதம் கம்பீர், அனைத்து தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்
New Delhi: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜக-வில் இணைந்துள்ளார். நிதி அமைச்சர் அருண் ஜெட்லி முன்னிலையில் அவர் இன்று பாஜக-வில் இணைந்துள்ளார். கடந்த பல மாதங்களாக கம்பீரின் அரசியல் என்ட்ரி குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வந்த நிலையில், லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் பாஜக-வில் அவர் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக-வில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தது குறித்து கம்பீர், ‘பிரதமர் மோடியால் நான் ஈர்க்கப்பட்டேன். நாட்டுக்காக அவரின் தொலைநோக்குப் பார்வை என்னை கவர்ந்தது. நாட்டுக்கு என்னால் இயன்றதைச் செய்ய இது சரியான தளம்' என்று கூறியுள்ளார்.
தேர்தலுக்கு முன்னர் பாஜக-வில் இணைந்துள்ளதால், கம்பீருக்கு எப்படியும் சீட் கொடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. கம்பீர், டெல்லிவாசி என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், அவருக்கு டெல்லியில் ஒரு தொகுதி ஒதுக்கப்படலாம் எனப்படுகிறது.
கம்பீர் இணைப்பு குறித்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ‘பாஜக-வில் கம்பீர் இணைந்துள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்தது. தேர்தல் அவர் போட்டியிடுவது குறித்து, கட்சியின் தேர்தல் குழு முடிவெடுக்கும்' என்று முடித்துக் கொண்டார்.
கம்பீருக்கு சமீபத்தில்தான் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அவர் 2014 மக்களவைத் தேர்தலின்போது, அருண் ஜெட்லிக்காக அம்ரிஸ்டர் தொகுதியில் பிரசாரம் செய்தார். அந்தத் தேர்தலில் ஜெட்லி தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் மாதம் கம்பீர், அனைத்து தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். தற்போது அவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணனை செய்து வருகிறார்.
அவர் சமீப காலமாக சமூக வலைதளங்களில் நடப்பு அரசியல் குறித்து காரசாரமாக பேசி வந்தார். அதையொட்டித்தான் அவர் எப்படியும் அரசியலில் குதிப்பார் என்ற பேசப்பட்டு வந்தது. புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, கம்பீர், ட்விட்டர் பக்கத்தில், அது குறித்து அதிக பதிவுகள் இட்டு வந்தார்.