ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான அரசில் சிதம்பரம்தான் நிதி அமைச்சராக இருந்தார்
New Delhi: இன்னும் ஒரு சில நாட்களில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தனது கடைசி பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த பட்ஜெட் குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த சிதம்பரத்திடம், “இந்த முறை பட்ஜெட்டை நீங்கள் தாக்கல் செய்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்” என்று கேட்கபட்டது. அதற்கு அவர் “நான் மட்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிதி அமைச்சராக இருந்திருந்தால், எனது பதவியை ராஜினாமா செய்திருப்பேன்” என்று கூறினார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான அரசில் சிதம்பரம்தான் நிதி அமைச்சராக இருந்தார். ஐமுகூ அரசின் கடைசி ஆண்டான 2009-ல் பட்ஜெட் தாக்கல் செய்த சிதம்பரம், 60,000 கோடி ரூபாய்க்கான விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டார். அதுதான் ஐமுகூ மீண்டும் ஆட்சிக்கு வர உதவியது என்று பரவலாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் அவர் செய்தியாளர்கள் மத்தியில் தொடர்ந்து பேசும்போது, “இந்த அரசிடமிருந்து உறுப்படியாக ஒன்றையும் எதிர்பார்க்க முடியாது. தற்போது தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டால் அடுத்த 60 நாட்களில் எவ்வித மாற்றமும் நிகழ்ந்து விடாது. அரசின் அனைத்துத் துறைகளும் மிகவும் வலுவிழந்து காணப்படுகிறது” என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார்.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல்நிலை சற்று சரியில்லாததால், அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்து வருகிறார். அவர் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபா தேர்தல் வர இன்னும் ஒரு சில மாதங்களே இருப்பதால், மத்திய பட்ஜெட்டில் பல அதிரடிகளை எதிர்பார்க்கலாம் எனப்படுகிறது. குறிப்பாக விவசாயிகளை மனதில் வைத்து பல அறிவிப்புகள் வெளியிடப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
மேலும் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருக்க மத்திய அரசு, அதிக முயற்சி மேற்கொள்ளாது என்றும் மாறாக, வளர்ச்சிக்காக பட்ஜெட்டில் அதிக அறிவிப்புகள் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.