முன்னாள் நிதிச் செயலாளர் ராஜீவ் குமார் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்
ஹைலைட்ஸ்
- லாவாசா ஆகஸ்ட் 31 ம் தேதி தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்கிறார்
- தேர்தல் ஆணையராக முன்னாள் நிதிச் செயலாளர் ராஜீவ் குமார் நியமனம்
- லாவாசா ஆசிய அபிவிருத்தி வங்கியின் துணை தலைவராக பொறுப்பேற்கிறார்
New Delhi: இந்திய தேர்தல் ஆணையராக முன்னாள் நிதிச் செயலாளர் ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்ட அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 31 ம் தேதி தேர்தல் ஆணையர் அசோக் லாவாசா தனது பதவியை ராஜினாமா செய்து, ஆசிய அபிவிருத்தி வங்கியின் துணை தலைவராக பொறுப்பேற்கிறார்.
இந்நிலையில் ராஜீவ் குமார் ஆகஸ்ட் 31 ம் தேதி முதல் தேர்தல் ஆணையராக செயல்படுவார் என சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராஜீவ் குமாரை தேர்தல் ஆணையராக நியமிப்பதில் ஜனாதிபதி மகிழ்ச்சியடைகிறார் என்று சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் குமார் பல துறைகளில் பொது கொள்கை மற்றும் நிர்வாகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர். மாஸ்டர் ஆஃப் பப்ளிக் பாலிசி மற்றும் சஸ்டைனபிலிட்டியுடன் பி.எஸ்.சி மற்றும் எல்.எல்.பி பட்டங்களை பெற்றவர்.
மேலும், குமார் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிதி செயலாளராக நியமிக்கப்பட்டார், இந்த ஆண்டு பிப்ரவரியில் அவரது பணி முடிந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் நிதி சேர்க்கும் திட்டத்தின் முக்கிய துறைகளான, பிரதான் மந்திரி ஜன தன் யோஜனா மற்றும் முத்ரா கடன் திட்டம் போன்ற முக்கிய திட்டங்களில் அவர் சிறப்பாக பணியாற்றியதாக அறியப்படுகிறார்.
நிதிச் செயலாளராக ஓய்வு பெற்ற பின்னர், குமார் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பொது நிறுவனத் தேர்வு வாரியத்தின் (பிஇஎஸ்பி) தலைவராக நியமிக்கப்பட்டார். PESB மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் உயர்மட்ட ஆட்சேர்ப்புகளை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
62 வயதான லாவாசா 2018 ஜனவரியில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார், மேலும் அவரது பதவிக்காலத்தில் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர் பொறுப்பில் அவர் நியமிக்கப்படுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து லாவாசா ஆகஸ்ட் 31 ம் தேதி தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்கிறார்.
கடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு எதிரான புகார்களின் மீதான தீர்ப்பு குறித்து லாவாசா கருத்து வேறுபாடு கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.