This Article is From Mar 24, 2020

7 மாத தடுப்புக் காவலுக்குப் பின்னர் விடுதலையாகும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்!

Omar Abdullah: கடந்த, 13 ஆம் தேதி ஒமர் அப்துல்லாவின் தந்தையும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, தடுப்புக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

7 மாத தடுப்புக் காவலுக்குப் பின்னர் விடுதலையாகும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்!

Omar Abdullah: கடந்த மார்ச் 10 ஆம் தேதி, ஒமர் அப்துல்லாவுக்கு 50 வயது ஆனது

ஹைலைட்ஸ்

  • ஜம்மூ காஷ்மீரின் 370வது சட்டப்பிரிவு கடந்த ஆகஸ்ட்டில் ரத்து செய்யப்பட்டது
  • அப்போதிலிருந்து ஒமர் அப்துல்லா சிறையில் இருக்கிறார்
  • ஒமரின் தந்தை ஃபரூக் அப்துல்லா சில நாட்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டார்
Srinagar/ New Delhi:

Omar Abdullah: ஏறத்தாழ 8 மாதங்களாகத் தடுப்புக் காவலில் இருக்கும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, விடுதலை செய்யப்பட உள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவான 370-ஐ ரத்து செய்தது மத்திய அரசு. ரத்து செய்வதற்கான ஆணையை வெளியிடுவதற்கு முன்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் உட்படப் பல முக்கிய அரசியல் தலைவர்களைத் தடுப்புக் காவலில் வைத்தது அரசு.

ஒமர் அப்துல்லா சிறையில் அடைக்கப்பட்ட அதே நேரத்தில் அடைக்கப்பட்ட மற்றொரு முன்னாள் முதல்வரான மெஹ்பூபா முப்டி, “ஒமர் விடுதலை செய்யப்படுவது மகிழ்ச்சி. இந்த அரசு பெண்கள் முன்னேற்றம் பற்றித் தொடர்ந்து பேசி வருகிறது. ஆனால், பெண்களைப் பார்த்துத்தான் அதிகம் பயப்படுகிறது,” என்று ட்வீட்டியுள்ளார். 

ஒமர் அப்துல்லாவின் சகோதரி, உச்ச நீதிமன்றத்தில், அவரின் விடுதலை குறித்து முறையிட்டிருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சென்ற வாரம் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது. 

நீதிமன்றம், “ஒமர் அப்துல்லாவை விடுதலை செய்ய உள்ளீர்கள் என்றால், அதை உடனடியாக செய்யவும். காஷ்மீரில் இப்போது நிலைமை சகஜமாக உள்ளது. எனவே அவரை விடுவிப்பது குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?” என மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியது. 

கடந்த, 13 ஆம் தேதி ஒமர் அப்துல்லாவின் தந்தையும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, தடுப்புக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார். 

கடந்த மார்ச் 10 ஆம் தேதி, ஒமர் அப்துல்லாவுக்கு 50 வயது ஆனது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் கைது செய்யப்பட்டபோது, எந்த சட்டப் பிரிவுக்குக் கீழ் கைது செய்யப்படுகிறார் என்று சொல்லப்படவில்லை. ஆனால் பின்னர், பிஎஸ்ஏ எனப்படும் பொது பாதுகாப்புச் சட்டத்திற்குக் கீழ் சிறை வைக்கப்பட்டார். 

தனது சிறைவாசத்தின் போது, தாடியை மழிக்க மறுத்துவிட்டார் ஒமர் அப்துல்லா. தடுப்புக் காவலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில், அவர் தாடியை மழிக்காமல் இருக்கிறார். 

.