This Article is From Aug 17, 2018

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 93

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்
New Delhi:

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 93. சிறுநீரக தொற்று காரணமாக கடந்த 9 வாரங்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாஜ்பாயின் உடல் நிலையில் நேற்று பின்னடைவு ஏற்பட்டது. இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்தது.

“ ஜூன் 11-ம் தேதி முதல் 9 வாரங்களாக வாஜ்பாயின் உடல் நிலை சீராக இருந்தது. ஆனால், கடந்த 36 மணி நேரத்தில் அவரது உடல் நிலை கடும் பின்னடைவை சந்தித்தது. தீவிர சிகிச்சையில் அவர் கண்காணிக்கப்பட்டு வந்தார். இருந்த போதும். அவரை காப்பாற்ற முடியவில்லை” என்று எய்ம்ஸின் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக பிரதமர் மோடி அவரை இன்று இரண்டாவது முறையாக நேரில் சென்று உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். அவரைத் தொடர்ந்து ராகுல் காந்தி மற்றும் பா.ஜ.கவின் முக்கிய தலைவர்களும் எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்தனர்.

கவிஞர், பேச்சாளர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாராளுமன்ற உறுப்பினர் என பன்முகத் தன்மை கொண்டவர் வாஜ்பாய். மூன்று முறை பிரதமர் பதவி வகித்தவர் வாஜ்பாய்.1996-ம் ஆண்டு 13 நாட்களும், 1998-ம் ஆண்டு 13 மாதங்களும், 1999-ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் பிரதமராக இருந்துள்ளார். காங்கிரஸ் அல்லாது 5 ஆண்டுகள் முழுமையாக நீடித்த ஒரு ஆட்சி, வாஜ்பாயினுடைய ஆட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

.