ஒன்பது வாரங்களுக்கு முன்பு அடல் பிகாரி வாஜ்பாய் மருத்துவமனையில் அனுமதி
ஹைலைட்ஸ்
- ஜூன் 11 அன்று வாஜ்பாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்
- கடந்த 24 மணி நேரத்தில் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்
- பிரதமர் மோடி பார்த்து வந்த சில மணி நேரத்தில் மருத்துவமனை அறிக்கை வெளியீடு
New Delhi: இந்தியாவின் பத்தாவது பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் கவலைக்கிடம் அடைந்திருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியாகியுள்ளது. உயிர் காக்கும் கருவிகள் கொண்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி இன்று மாலை மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயை பார்த்து வந்த சில மணி நேரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மாலை 7:15 மணி அளவில் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தார். 50 நிமிடங்கள் வரை அவர் அங்கு இருந்தார்.
இரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, பாஜ எம்பி மீனாக்ஷி லேகி ஆகியோரும் வாஜ்பாயை மருத்துவமனையில் பார்த்து அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள வாஜ்பாய் கடந்த ஜூன் 11 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.
அடல் பிகாரி வாஜ்பாய் மூன்று முறை பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1999-2004 காலகட்டத்தில் இவர் பிரதமராக இருந்தபோது, ஐந்தாண்டுகள் பிரதமர் பதவியை பூர்த்தி செய்த காங்கிரஸ் கட்சியை சாராத முதல் பிரதமர் என்ற சாதனையை இவர் படைத்தார். உடல்நிலை நலிவடைந்ததால் கடந்த சில ஆண்டுகளாகவே வாஜ்பாய் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டிலேயே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.