நெஞ்சுவலி காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி! (File)
New Delhi: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். இரவு 8.45 மணிக்கு மருத்துவமனையின் கார்டியோ வார்டுக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் தொடர்ந்து, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
87 வயதாகும் மன்மோகன் சிங் தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை என்றும், அவருக்கு மருத்துவ நிபுணா் நிதீஷ் நாயக் சிகிச்சை அளித்து வருவதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் மாதம் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்னதாகவே மன்மோகன் சிங் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் அவரது மருத்துவர்கள் முழுமையான ஓய்வில் இருக்கும் படி அறிவுறுத்தியிருந்தனர்.
மன்மோகன் சிங்குக்கு கடந்த 1990 ஆம் ஆண்டில் முதல் முறையாக இதயத்தில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு அவருக்கு 5 முறை இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 2004-ஆம் ஆண்டு இதய ரத்தக்குழாயில் ‘ஸ்டென்ட்' பொருத்தப்பட்டது.
மன்மோகன் சிங் கடந்த 2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்தார். சிறந்த பொருளாதார நிபுணரான அவர், தலைமைப் பொருளாதார ஆலோசகர், மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர், மத்திய நிதியமைச்சர் பொறுப்புகளையும் வகித்துள்ளார். இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார்.
இதனிடையே, மன்மோகன் சிங் நேற்று இரவு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இருந்த நிலையில், திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, அவர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையடுத்து, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மன்மோகன் சிங்கின் உடல்நலம் குறித்து கவலை தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், "முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்து மிகவும் கவலைப்படுகிறேன். அவர் விரைவாக குணமடைய விரும்புகிறேன் மற்றும் அவரது நல்ல ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பிரார்த்தனை செய்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.