பழிவாங்கும் அரசியலை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மன்மோகன் கூறியுள்ளார்.
New Delhi: பொருளாதார மந்த நிலைக்கு (Slow Down) மோடி அரசின் தவறான நிர்வாகத்திறனே காரணம் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார். நாட்டின் வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்திருக்கும் நிலையில் மன்மோகனிடம் இருந்து விமர்சனம் வந்துள்ளது.
2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டு பகுதியில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 5 சதவீதமாக குறைந்து விட்டது. இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத ஓர் வீழ்ச்சியாகும். பொருளாதார மந்த நிலை விவகாரம் நாடு முழுவதும் பேசப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது-
பொருளாதார வீழ்ச்சி தொடர்ந்து கொண்டிருப்பதை இந்தியாவால் பொறுத்துக் கொள்ள முடியாது. பழி வாங்கும் அரசியலை கைவிட்டு விட்டு மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த பொருளாதார சிக்கலில் இருந்துநாட்டைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் தவறான நிர்வாகத் திறன்தான் பொருளாதார மந்த நிலைக்கு காரணம். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்திருப்பது என்பது, நீண்ட கால பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் நாம் இருக்கிறோம் என்பதை காட்டுகிறது.
இவ்வாறு மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மந்த நிலை காரணமாக பிஸ்கட் முதல் கார் வரையிலான பொருட்களின் நுகர்வு கணிசமாக குறைந்திருக்கிறது. இதனால் லட்சக் கணக்கானோர் வேலையிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த அவர்,வங்கித்துறையில் சீர் திருத்தம், பொதுத்துறை வங்கிகளை இணைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அறிவித்தார்.